

தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் செந்தில்குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள், சாதனங்கள் வாங்கிக் கொள்ள மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி ஒதுக்கி கடிதம் வழங்கினேன். ஆனால், மத்திய அரசு இடையில், மக்களவை உறுப்பினர்களின் நடப்பு ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த வேண்டாம் எனக் கூறி நிதியை ரத்து செய்தது. இதனால், நான் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அளித்த நிதி இயல்பாகவே ரத்தானது.
இந்நிலையில், கடந்த ஆண்டில் மத்திய அரசு முதல் தவணையாக ஒதுக்கிய தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி நிதி, என் கவனத்துக்கு தெரிவிக்கப்படாமலே தருமபுரி மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கேள்வி எழுப்பினால், கரோனா தடுப்பு பணிகளுக்கு அளித்த நிதி ஒதுக்கீட்டு கடிதம் மூலம் கடந்த ஆண்டு நிதியில் இருந்து பணம் எடுத்ததாகவும், அதன் மூலம் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ததாகவும் மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.
மக்களவை உறுப்பினர் நிதியில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.1 கோடியில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் வாங்கப்பட்டுள்ளதா என விசாரித்தபோது மருத்துவகல்லூரி, சுகாதாரத் துறை தரப்பில்தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. எனவே, மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்புகுழு மூலம் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த வேண்டும்.
மத்திய நிதி அமைச்சகத்துக்கு புகார் அளிக்க இருக்கிறேன். ஆட்சியர் மீது விசாரணை கோரி தலைமைச் செயலரிடமும் புகார் அளிக்கப்படும். இவ்வாறு செந்தில்குமார் எம்.பி. கூறினார்.