

சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க குரல் கொடுத்த இமானுவேல் சேகரன் நினைவுநாளில் அவரது தியாகங்களை நினைவுகூர்வதாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அவரை நினைவுகூர்ந்துள்ளனர்.
முதல்வர் பழனிசாமி: சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க குரல் கொடுத்தவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான வீரர் இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் அவரது சமூக பற்றையும், தியாகங்களையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன். சமூக சீர்திருத்தத்துக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கும் பாடுபட்டு உயிர்நீத்த இமானுவேல் சேகரனாரை நினைவுகூர்கிறேன்.
துணை முதல்வர் ஓபிஎஸ்: பள்ளி ஆசிரியருக்கு மகனாக பிறந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை இளவயதிலேயே எதிர்த்து போராடி, சிறையில் அடைக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரிமைக் குரல் கொடுத்து, தீண்டாமையை ஒழிக்க மக்களை திரண்டெழச் செய்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தியாகி இமானுவேல் சேகரன். அவரது நினைவு நாளில் அவரது தியாகங்களை நினைவு கூர்ந்து போற்றுவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.