

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.2,085 கோடியில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட கரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் பழனிசாமி பேசியது:
தமிழகத்தில் தினந்தோறும் 7,500 முதல் 8,000 வரை இருந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 5,500 ஆக குறைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 88 சதவீதம் பேர் குணமடைந்துவிட்டனர். மருந்தே இல்லாத சூழ்நிலையில் இவ்வளவு பேர் குணமடைந்து இருப்பது மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஊழியர்களின் சிறப்பான சேவையால்தான்.
கரோனாவால் இறப்பு எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. நேற்று முன்தினம் 64 பேர் மட்டுமே இறந்துள்ளனர். இறந்தவர்களில் பலர் ஏற்கெனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது.
குடிமராமத்து திட்டத்தை முதன்முதலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைத்தேன். இது ராசியான மாவட்டம். தமிழகம் முழுவதும் சிறப்பாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏரி, குளங்கள் நிரம்பி விவசாயப் பணிகள் சிறப்பாக நடக்கின்றன.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.2,085 கோடியில் வெள்ளத் தடுப்பு திட்டம் அமல்படுத்தப்படும். உதயம்பாக்கம், படாளம் பகுதியில் ரூ.250 கோடியில் கதவணையும், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் வாயலூர் அருகே ரூ.300 கோடியில் ஒரு கதவணையும் அமைக்கப்படும். செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.100 கோடியில் யோகா மையம் அமைக்கப்படும் என்றார்.
இவ்விழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டப்பட்ட வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு உள்ளிட்ட ரூ.260.46 கோடி மதிப்புள்ள கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் உட்பட ரூ.30.74 கோடி மதிப்புள்ள கட்டிடங்களை திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.53.33 கோடி மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.66.90 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16,532 பேருக்கு ரூ.198.62 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 5,904 பேருக்கு ரூ.132.48 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவில் அமைச்சர் பெஞ்சமின், செய்தி மக்கள் தொடர்பு இயக்குநர் சங்கர், காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா, செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டுப் பூங்கா அமைப்பதற்கான 25 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,160 சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இவற்றில் 53,052 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு ரூ.1,800 கோடிக்கு கடன் தரப்பட்டுள்ளது.
மதுரை கீழடி போன்று காஞ்சிபுரம் பாலாறு உள்ளிட்ட வட மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி நடத்துவது குறித்து அரசு பரிசீலிக்கும். கடந்த ஆட்சியைவிட தற்போது தமிழக நகரங்கள் தூய்மையாகவே உள்ளன என்றார்.