Published : 12 Sep 2020 07:34 AM
Last Updated : 12 Sep 2020 07:34 AM

க்யூஆர் தொழில்நுட்பத்தில் டிக்கெட் பெறும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டண சலுகை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு

க்யூஆர் தொழில்நுட்பத்தில் டிக்கெட் பெறும் பயணிகளுக்கு 20 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சென்னையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை கடந்த 7-ம் தேதியிலிருந்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பயணிகளுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க மெட்ரோ ரயில்நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக, டிக்கெட் கவுன்டர்களில் கூட்ட நெரிசலை தவிர்த்து, சமூக இடைவெளியை கடைபிடித்து மக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகள் தங்களது செல்போன்களில் சிஎம்ஆர்எல் எனும் செயலியை பதிவிறக்கம் செய்து, அதில் க்யூஆர் (QR) தொழில்நுட்பத்தின் மூலம் டிக்கெட்களை பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தை பயன்படுத்த, பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களுக்கு பயணக் கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை அளிக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

ஒருமுறை பயண டிக்கெட், ரிட்டன் டிக்கெட் உள்ளிட்ட அனைத்துவித பயண டிக்கெட்டுகளை க்யூஆர் தொழில்நுட்பத்தில் பெறும் அனைத்து பயணிகளுக்கும் இந்த கட்டண சலுகைபொருந்தும்.

மேலும், மின்னணு பயணஅட்டையை மதிப்பிடும் இயந்திரங்கள், பயணச்சீட்டுகளை வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் ஆகியவை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் பயணிகள் பயன்படுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, ‘‘கரோனா பரவலை தடுக்க கூட்ட நெரிசலை தவிர்ப்பது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மின்னணு முறையில் டிக்கெட் பெற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அனைத்து வாகன நிறுத்தங்களிலும்‌ மின்னனு பணப் பரிவர்த்தனைகள்‌ ஊக்குவிக்கப்படுகின்றன. க்யூஆர் தொழில்நுட்பம் மூலம் டிக்கெட் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் 20 சதவீதம் கட்டண சலுகை அளிக்கப்படுகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x