Published : 12 Sep 2020 07:06 AM
Last Updated : 12 Sep 2020 07:06 AM

கடந்த 10 நாட்களில் சென்னை மாநகர பேருந்துகளில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பயணம்

சென்னை

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் 1 கோடியே 1 லட்சத்து 23 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.10 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கோ.கணேசன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த 1-ம் தேதிமுதல் பேருந்துகளை இயக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின.

பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, பயணிகள் அதிகம் பயணம் செய்யும் தடங்களில்தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் கிளை மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பேருந்துகள் உரிய முறையில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுவதோடு, ஓட்டுநர், நடத்துநர்களுக்கு தேவையான முகக்கவசங்கள், கையுறைகள், கையடக்க கிருமிநாசினி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. முகக்கவசம் இல்லாத பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

தினமும் 2,400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் 10லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதில் பயணம் செய்கிறார்கள்.

ரூ.10 கோடி வருவாய்

குறிப்பாக புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், மீஞ்சூர், அம்பத்தூர் மற்றும் ஆவடி ஆகிய பகுதிகளில் பயணிகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. கடந்த 1-ம் தேதிமுதல் இதுவரையில் 1 கோடியே 1 லட்சத்து 23 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் சுமார் ரூ.10 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x