Published : 12 Sep 2020 07:04 AM
Last Updated : 12 Sep 2020 07:04 AM

விபத்து ஏற்படுத்தும் குடிநீர் லாரி ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை

சென்னை

விபத்து ஏற்படுத்தும் குடிநீர் லாரி ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரித்துள்ளார்.

சென்னை கிண்டி சிட்கோ வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில ஊரக புத்தாக்கத் திட்ட புதிய அலுவலகத்தை, அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

அப்போது அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் ரூ.918 கோடியே 20 லட்சத்தில் உலக வங்கியின் கடனுதவியுடன் தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் 120 வட்டாரங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 994 கிராம ஊராட்சிகளில் ஊரக தொழில்களை மேம்படுத்த 2018-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா பேரிடர் காலத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், கோவிட் -19 சிறப்பு நிதி உதவி திட்டம் ரூ.300 கோடி மதிப்பில் கடந்த மே மாதம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிதியுதவி தொகுப்பின் மூலம் தற்போது வரை 1 லட்சத்து 63 ஆயிரத்து 694 பயனாளிகளுக்கு ரூ.254 கோடியே 94 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் செயல்பட்டுவந்த தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட அலுவலகம் தற்போது கிண்டியில் உள்ள சிட்கோ வளாகத்தின் 5-வது தளத்தில் செயல்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட தலைமை செயல் அலுவலர் கார்த்திகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தனியார் வாகனங்கள்

சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிநீர் லாரி கட்டுப்பாடின்றி ஓடி ஏற்படுத்திய விபத்தில் சிறுவன் உயிரிழந்தது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘தனியார் வாகனங்கள்தான் இதுபோன்று விபத்தில் சிக்குகின்றன. விபத்து ஏற்படுத்தும் வாகன ஓட்டுநர்கள் மீது ,இனி வருங்காலத்தில் இதுபோன்று நடக்காத வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவன் இறந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x