

காந்தியவாதி சசிபெருமாளின் மகன் விவேக் மற்றும் உறவினர்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்று சித்தர் கோயில் முன்பு உள்ள காந்தி சிலை அருகே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த ஆகஸ்ட் 15-ல் பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என சசிபெருமாளின் மகன் விவேக் உள்ளிட்ட உறவினர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை சசிபெருமாள் மகன்கள் நவநீதன், விவேக் மற்றும் சசிபெருமாளின் அண்ணன் வெங்கடாசலம், தம்பி செல்வம், அவரது மகன் ராஜா ஆகியோர் காலை 7 மணி முதல் அவரது வீட்டின் அருகே உள்ள காந்தியவாதி சசிபெருமாள் சமாதி முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
முதல் கட்டமாக பஸ் நிலையம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டசபை கூட்டம் முடியும் வரை தினமும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவர்கள் அறிவித்தனர்.
கஞ்சமலை சித்தர்கோயில் அருகே உள்ள காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்க மகுடஞ்சாவடி போலீஸாரிடம் குடும்பத்தினர் அனுமதி கேட்டனர். ஆனால், அதற்கு போலீஸார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் வீட்டின் முன்பு அதிகாலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு காலை 9 மணிக்கு இளம்பிள்ளைக்கு சென்று காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதையடுத்து மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் சாந்தமூர்த்தி மற்றும் போலீஸார் சசிபெருமாளின் மகன்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.