Published : 11 Sep 2020 10:01 PM
Last Updated : 11 Sep 2020 10:01 PM

கரோனாவை  தமிழகத்தில் தான் கட்டுப்படுத்த முடியாததுபோல் எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதா?- முதல்வர் கேள்வி

கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டு வரும் ஒரு கடுமையான நோய், எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏதோ தமிழகத்தில் தான் இந்த நோய் ஏற்பட்டதைப் போலவும், தமிழகத்தில் தான் கட்டுப்படுத்த தவறியதைப் போலவும் வேண்டுமென்றே எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசின் மீது குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என முதல்வர் விமர்சித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் முதல் ஆற்றிய உரை:

“அனைவருக்கும் வணக்கம்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தொற்றைத்தடுக்க பல்வேறு மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களாக இருப்பதால், அதிகமாக மக்கள் வந்து செல்லக்கூடிய மாவட்டங்களாகத் திகழ்வதாலும், குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் இந்த இரண்டு மாவட்டங்களிலும் அதிகமாக உள்ளதாலும், இங்கு பணிபுரியும் தொழிலாளர்களும் அதிகளவில் உள்ளதாலும், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை இணைந்து சிறப்பான முறையில் நடவடிக்கைகள் எடுத்த காரணத்தால், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் ஆரம்பத்தில் அதிகமாக இருந்தாலும், தற்பொழுது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் மக்கள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளதால், இந்நோய்த் தொற்றை கண்டறிவது கடினமாகவும், சவாலாகவும் இருக்கின்றது. மக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு எளிதாக வந்து செல்லக்கூடிய பகுதியாக இருப்பதினால் Contact tracing செய்தால்தான் இந்நோய்ப் பரவலைக் குறைக்க முடியும்.

இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து பலர் வருவதால் இந்நோய்த் தொற்று பரவியுள்ளது. நோய் தொற்று உள்ள இடங்களுக்கு உடனடியாக மருத்துவக் குழு சென்று, பரிசோதனைகள் செய்வதன் மூலமாக, தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து, மருத்துவமனையில் சேர்த்து, குணமடையச் செய்யப்படுகிறது.

இந்நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக போதுமான மருத்துவமனைகளை உருவாக்கி, போதிய படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் போதிய அளவு கையிருப்பில் இருக்கின்றன.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகளவில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களை RTPCR பரிசோதனைக்கு உட்படுத்தி, நோய் தொற்று அறிகுறியுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, தமிழகம் முழுவதும் 7,000 முதல் 8,000 வரை இருந்த கரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாக குறைந்து, தற்பொழுது சுமார் 5,500 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையுள்ளது.

அரசியல் ஆதாரம் தேடுவதற்காக, இந்த நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டது என்று வேண்டுமென்றே சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புதிய நோய். நாளுக்கு நாள் இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலும், இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையிலும், தமிழ்நாடு அரசின் கடும் நடவடிக்கைகள் காரணமாக, மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து, சராசரியாக 88 சதவிகிதம் நபர்கள் குணமடைந்துள்ளனர்.

இதுவே மிகப்பெரிய வெற்றி ஆகும். தமிழகத்தில் கரோனா தொற்றால் இறந்தோர் எண்ணிக்கை 118 முதல் 120 வரை என்று இருந்தது. சிறந்த முறையில் சிகிச்சை அளித்த காரணத்தால் தற்பொழுது அது பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய சாதனை ஆகும். ஏற்கனவே பிற நாள்பட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு இந்தத் நோய் தொற்று எளிதாகப் பரவுவதால் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட, நேரடியாக கரோனா வைரஸ் தாக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை மிக, மிகக் குறைவு என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்றினால் இந்நோய்த் தொற்றுப் பரவலை எளிதாக தடுத்துவிடலாம். அரசாங்கத்தின் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கினால்தான் இந்த நோய்த் தொற்றுப் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்து இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். எவ்வளவு தான் அரசாங்கம் முயற்சி செய்தாலும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கினால் தான் கரோனா வைரஸ் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

கரோனா வைரஸ் தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவை மட்டுமல்ல, உலகையே அச்சுறுத்திக் கொண்டு வரும் ஒரு கடுமையான நோய். எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஏதோ தமிழகத்தில் தான் இந்த நோய் ஏற்பட்டதைப் போலவும், தமிழகத்தில் தான் கட்டுப்படுத்த தவறியதைப் போலவும் வேண்டுமென்றே எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசின் மீது குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அது தவிர்க்கப்பட வேண்டும். சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, கூட்டுறவுத் துறை, உணவுத் துறை என்று பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், தங்கள் குடும்பத்தையும் பொருட்படுத்தாமல், அர்ப்பணிப்பு உணர்வோடு இப்படிப்பட்ட சோதனையான காலத்தில் முன் நின்று, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், மக்களுடைய உயிரை காப்பாற்ற வேண்டும் என்று பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் தயவு செய்து கொச்சைப்படுத்த வேண்டாம்.

இந்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பணியிலே இருக்கும்பொழுது இறந்திருக்கிறார்கள். அதற்குக் காரணம், இந்நோய்த் தொற்று ஏற்பட்ட காலக்கட்டத்திலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்று அர்ப்பணிப்போடு பணியாற்றியதால் தான்.

அரசு அறிவிக்கின்ற திட்டங்களைச் செயல்படுத்துவது அரசுப் பணியாளர்கள் தான். அது எந்த ஆட்சியானாலும் சரி. எனவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக, துணையாக நிற்க வேண்டியதை விட்டுவிட்டு, இன்றைக்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தவறிவிட்டார்கள் என்று தவறான கருத்தைச் சொல்வது எப்படி ஏற்புடையதாக இருக்கும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அரசுக்கு ஒவ்வொரு உயிரும் முக்கியம்.

அதேபோல ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களை காப்பாற்றுகின்றவர்கள், நம் அரசுப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள். அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி, அரசுக்கு துணை நின்று கொரோனா நோய் பரவலைத் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பாராட்ட மனமில்லாமல் இருந்தாலும் பரவாயில்லை, தயவு செய்து குறை சொல்லாமல் இருந்தாலே அவர்களைப்பாராட்டுவதாக இருக்கும் என்ற கருத்தைத் தெரிவிக்கின்றேன்.

சிறப்பாக அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிறவர்களுக்கு ஆறுதலாக நல்ல வார்த்தைகளை சொன்னால்தான் அவர்கள் இன்னும் சிரத்தையோடு பணியாற்றுவார்கள். அவர்களைக் குறை கூறிக் கொண்டிருந்தால், அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிற தங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு அவதூறான சொல் கிடைக்கிறதே என்று, அவர்களது மனம் கஷ்டப்படும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் அவர்களுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். அதுதான் நாம் அரசு பணியாளர்களுக்கு செய்கின்ற கடமையாகும். மார்ச் 24ஆம் தேதியிலிருந்து கிட்டத்தட்ட 5 மாத காலம், கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகளை நம் அரசு அலுவலர்கள் தொடர்ந்து தொய்வின்றி முழு ஈடுபாட்டோடு செய்து கொடிருக்கிறார்கள். நாம் அனைவரும் அவர்களுக்கு உற்ற துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா வைரஸ் பரவல் இருக்கின்ற இந்த சூழ்நிலையில் கூட, வேளாண் பணிக்கு 100 சதவீதம் தளர்வுகளை கொடுத்ததால், தமிழ்நாடு வேளாண் உற்பத்தியில் வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறது. என்றைக்கும் இல்லாத அளவிற்கு நெல் உற்பத்தி இந்த ஆண்டு அதிகமானதன் விளைவாக வேளாண் பெருமக்களுக்கு வருமானம் இரட்டிப்பாக கிடைத்திருக்கிறது. வேளாண் தொழிலாளர்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பும் கிடைக்கப் பெற்றிருக்கிறது.

அதோடு குறு, சிறு, நடுத்தர, பெரிய நிறுவனங்கள் அனைத்தும் 100 சதவீதம் பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என தளர்வுகளை அறிவித்த காரணத்தால், ஏறக்குறைய குறு, சிறு, நடுத்தர, பெரிய நிறுவனங்களில் 85 சதவீத பணியாளர்களை கொண்டு தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றன. இப்படி, படிப்படியாக இயல்பு நிலையை கொண்டுவருவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதற்கு நம் அரசு அலுவலர்கள் துணை நிற்கின்றார்கள். அம்மாவின் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மழைக்காலங்களில் பெய்கின்ற மழை நீர் முழுவதையும் சேமித்து வைப்பதற்காக குடிமராமத்துத் திட்டம் என்ற திட்டத்தை அறிவித்து, அந்தத்திட்டத்தை ஒருங்கிணைந்த மாவட்டமாக இருக்கும்பொழுது முதன் முதலாக இந்த மாவட்டத்தில் தான், நான் துவக்கி வைத்தேன்.

இது ஒரு ராசியான மாவட்டம். குடிமராமத்து திட்டத்தை இந்த மாவட்டத்தில் துவக்கிய காரணத்தினால், தமிழ்நாடு முழுவதும் ஏரிகள் தூர்வாரப்பட்டு, நல்ல பருவமழை பொழிந்து கொண்டிருக்கின்றன, ஏரிகள் நிறைந்து கொண்டிருக்கின்றன. இந்த மாவட்டத்தில் உள்ள நதிகளின் குறுக்கே 7 தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்து, அதில் 2 தடுப்பணைகள் கட்டப்பட்டு, அதில் தற்பொழுது நீர் நிரம்பியிருக்கின்றன. ஒரு தடுப்பணையின் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது மற்றும் ஒரு தடுப்பணை கட்டும் பணி விரைவில் துவங்க இருக்கின்றது.

எஞ்சிய 3 தடுப்பணைகள் கட்டும் பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட இருக்கின்றன. அதோடு, ஒருங்கிணைந்த நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் உலக வங்கி நிதியுதவியுடன் ரூபாய் 2085 கோடி மதிப்பீட்டில் இந்தப் பகுதியில் நிறைவேற்றுவதற்கு அரசின் பரிசீலனையில் இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், வாயலூர் கிராமம் மற்றும் செய்யூர் வட்டம் கடலூர் கிராமத்திற்கு இடையில் பாலாற்றின் குறுக்கே ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

திருக்கழுக்குன்றம் வட்டம், உதயம்பாக்கம் கிராமம் மற்றும் மதுராந்தகம் வட்டம், படாளம் கிராமத்தில் ரூபாய் 280 கோடி மதிப்பீட்டில் கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் உள்ளது. மதுராந்தகம் வட்டம், மதுராந்தகம் ஏரியை ரூபாய் 125 கோடி மதிப்பீட்டில் ஆழப்படுத்தி மேம்படுத்தும் பணி பரிசீலனையில் இருக்கிறது. செங்கல்பட்டு வட்டத்திலுள்ள கொளவாய் ஏரியை ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

ஜி.எஸ்.டி சாலை மற்றும் குரோம்பேட்டை, பல்லாவரம் நகரப் பகுதிகளில் ரூபாய் 41 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புப் பணிகளுக்கான திட்டம் பரிசீலனையில் இருக்கிறது. இந்தத் திட்டங்களெல்லாம் நிறைவேறும்பொழுது, இந்தப் பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பணிகளுக்குத் தேவைக்கான நீர் கிடைக்கும். காஞ்சிபுரம் மாவட்டமும், செங்கல்பட்டு மாவட்டமும் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிறைந்த மாவட்டம் ஆகும். இந்தப் பகுதிகளில் அதிக அளவில் தடுப்பணை கட்டுவதற்கு அம்மாவின் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதோடு, இந்த இரண்டு மாவட்டங்களிலும் மாண்புமிகு அம்மாவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன. அம்மா இருக்கும்பொழுது முதன்முதலாக உலக முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தியதன் மூலமாக, பல புதிய தொழில்கள் இந்த இரண்டு மாவட்டத்திற்கும் வரப்பெற்றன. 2019-ல் அம்மா வழியில் வந்த தமிழக அரசு, உலக முதலீட்டாளர் மாநாட்டை சென்னையிலே நடத்திய போது, அதிக தொழில் முதலீட்டை ஈர்த்த இரண்டு மாவட்டங்கள் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் ஆகும்.

இதுபோன்று தொழில்கள் வரும்பொழுது, படித்த இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கும், பொருளாதாரமும் மேம்பாடு அடையும். வேளாண் பணிகளும், தொழிற்சாலைகளும் நிறைந்த பகுதியாக இந்த இரண்டு மாவட்டங்களும் திகழ்கின்றன. அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டு மாவட்டத்தைத் தலைமையிடமாகக்கொண்டு ஒரு புதிய மாவட்டம் அம்மாவின் அரசால், தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ரூபாய் 168 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் யோகா மையம் இந்த ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கட்டப்படவுள்ளது. அண்ணா அரசு நினைவுப் புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில், புற்று நோய்க்கான அனைத்து சிகிச்சைகளையும் வழங்க 300 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் சிகிச்சைக்கான மேன்மைமிகு மையம் அமைப்பதற்கு பணிகள் இந்த மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தாய், சேய் நலப் பிரிவு அமைக்க ரூபாய் 18 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் நிறுவப்பட்டுள்ளதோடு, அதிநவீன மருத்துவ உபகரணங்கள் ரூபாய் 8.50 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலைத் துறை மூலம் பல்வேறு சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதோடு, பல பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் சிறப்புக் குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம்,

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குத் தேவையான வங்கிக் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் பெருமக்களுக்கு நுண்ணீர் பாசனத்திற்கு உதவித் தொகை, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மூலம் இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தருவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு பல்வேறு வகைகளில் நாட்டு மக்களுக்குத் தேவையான திட்டங்களை வழங்குவதில் அம்மாவின் அரசு முன்னோடியாக திகழ்கிறது என்றால், அது மிகையாகாது”.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x