Published : 11 Sep 2020 09:27 PM
Last Updated : 11 Sep 2020 09:27 PM

அடையாளத்தை மறைத்து 31 ஆண்டுகள் சென்னையில் வசித்த இலங்கை பிரஜை கைது: கியூ பிராஞ்ச் போலீஸார் நடவடிக்கை 

அடையாளத்தை மறைத்து 31 ஆண்டுகளாக சென்னையில் செட்டிலாகிவிட்ட இலங்கை குடிமகனை கியூபிராஞ்ச் போலீஸார் கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மனைவி வழக்கறிஞராக பணியாற்றுவதாக தெரிகிறது.

இலங்கை, கொழும்பைச் சேர்ந்தவர் தாஜுதீன் சாலே (55), இவர் இலங்கையிலிருந்து கடநத 89-ம் ஆண்டு தமிழகம் வந்துள்ளார். பின்னர் 1996-ம் ஆண்டு சென்னைக்கு வந்து பாரிஸ், போரூர், அண்ணாநகர் போன்ற இடங்களில் குடியிருந்து தற்போது அண்ணாநகர் மேற்கு அன்பு நகரில் குடியிருந்து வருகிறார்.

இவரது மனைவி வழக்கறிஞராக உள்ளார். கடந்த 9-ம் தேதி இவர் மீது சந்தேகம் கொண்ட கியூ பிராஞ்ச் போலீஸார் இவர் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். கியூ பிராஞ்ச் ஆய்வாளர் வேலவன் நடத்திய விசாரணையில் தாஜுதீன் சாலே இந்தியர் அல்ல என்பதும் தமது அடையாளத்தை மறைத்து தமிழகத்தில் வசிக்கிறார் என்பதும் தெரியவந்தது. தனது தந்தை பெயரை மாற்றி மாற்றி சொன்னதால் போலீஸார் சந்தேகமடைந்து விசாரித்தபோது அவர் இலங்கைப்பிரஜை என்பது தெரியவந்தது.

சென்னையில் குடியேறி அடையாளத்தை மறைத்து போலி ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை முறைகேடாக பெற்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது, இதையடுத்து அவரை ஆவணங்களுடன் நேற்று இரவு மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் கியூபிராஞ்ச் போலீஸார் ஒப்படைத்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தி உறுதி செய்த போலீஸார் அவர்மீது ஐபிசி 465 (போலியான ஆவணங்களை உருவாக்குதல்) , 468 (போலியான ஆவணங்களை உருவாக்கி ஏமாற்றுதல்) 471(போலியான புனையப்பட்ட ஆவணத்தை உண்மை என மோசடியாக பயன்படுத்துதல்), 420 (மோசடி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x