

‘‘தமிழகத்தில் பாஜகவை தவிர மற்ற கட்சிகள் இந்தியை ஒருபோதும் ஏற்காது,’’ என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சார்பில் கரோனா பரிசோதனை (ஆர்.டி.பி.சி.ஆர்.) கருவி வழங்கப்பட்டது.
அக்கருவியை இன்று கார்த்தி சிதம்பரம் எம்.பி பார்வையிட்டார். மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பிறகு கார்த்திசிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது. தமிழகத்தில் பாஜகவை தவிர மற்ற கட்சிகள் இந்தியை ஒருபோதும் ஏற்காது. என்றுமே இருமொழிக் கொள்கை தான்.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். மீன்வளத் துறையில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு எப்போதும் மிகப்பெரிய தொகையில் தான் பல்வேறு திட்டங்களை அறிவிக்கும். அது ஒரு மாயையை ஏற்படுத்தும்; பலனளிக்காது.
மத்திய அரசு இந்தியை திணிக்கக் கூடாது. இந்தி, இந்து, இந்துஸ்தான் என்ற கொள்கையை பாஜக கைவிட வேண்டும். இந்தி தேசிய மொழி அல்ல. எல்லைப் பிரச்சினையில் சீனா பின்வாங்கி விட்டது. சீனா முன்னேறி வருகிறது என்றெல்லாம் மாறி, மாறி கூறிவருகின்றனர்.
மத்திய அரசிடம் ஒரு வெளிப்படையான செயல்பாடு இல்லை என்பதையே இது காட்டுகிறது. ரஃபேல் போர் விமானம் காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது. இந்த போர் விமானம் தரம் குறித்து சர்ச்சை ஏதும் இல்லை. வந்ததில் மகிழ்ச்சியே.
காளையார்கோவிலில் ராணுவவீரரின் தாய், மனைவி கொலை வழக்கு, சிங்கம்புணரி அருகே முன்னாள் விமானப்படை வீரர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கை காவல்துறை கண்டுபிடிக்காதது.
அதன் திறமையின்மையை காட்டுகிறது. இதுகுறித்து காவல்துறைத் தலைவரிடம் இருமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனை வன்மையாக கண்டிகிறேன்.
நாட்டில் சட்டங்கள் இயற்றலாம், மாற்றலாம். ஆனால் தண்டனைகளை கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும், என்று கூறினார்.