

தமிழ்நாட்டு வேலைகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளிலும் 10 சதவீதத்துக்கு அதிகமாக பணியாற்றி வரும் வெளி மாநிலத்தவரின் பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொன்மலை பணிமனை முன் தமிழ்த் தேசியப் பேரியக்கம் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை இன்று தனித்தனியே போராட்டத்தில் ஈடுபட்டன.
ரயில்வே துறையில் வெளி மாநிலத்தவரை அதிகளவில் பணியமர்த்துவதைக் கண்டித்து செப்.11, 12 மற்றும் செப்.14 முதல் செப்.18 வரை திருச்சி பொன்மலை பணிமனை முன் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் திருச்சி மாநகரச் செயலாளர் வே.க.இலக்குவன் தலைமையில் பணிமனை வாயிலை மறித்தவாறு இன்று (செப். 11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் த.பானுமதி, பொதுக் குழு உறுப்பினர்கள் மூ.த.கவித்துவன், நா.ராசா ரகுநாதன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப.சின்னதுரை, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து இலக்குவன் கூறும்போது, "தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு 90 சதவீதத்தை அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வருவோரில் 10 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள வெளி மாநிலத்தவரின் பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 90 சதவீதத்தை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். மண்ணின் மக்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்டத்தை தமிழ்நாட்டிலும் இயற்ற வேண்டும். தமிழ்நாடு அரசு பணியிடங்களில் வெளி மாநிலத்தவரை அனுமதிக்கும் வகையில் திருத்தப்பட்ட விதிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்றார்.
இதைத்தொடர்ந்து, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் பணிமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் நா.முரளி, துணைத் தலைவர் ரஞ்சித், பொருளாளர் பொன்னுசாமி, துணைச் செயலாளர் முருகதாஸ், இளைஞரணி செயலாளர் பாரத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.