Published : 11 Sep 2020 07:22 PM
Last Updated : 11 Sep 2020 07:22 PM

ஓவிய வடிவில் திருக்குறள்: தூரிகையால் தினந்தோறும் தமிழை வளர்க்கும் செளமியா!

வாழ்வின் அறம், பொருள், இன்பம் ஆகிய அனைத்துப் படிநிலைகளையும் குறள் மூலம், 2 அடிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தவர் திருவள்ளுவர். தமிழில் எழுதப்பட்ட உலகத்தின் பொதுமறையை, பைந்தமிழின் சொத்தை, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மொழி பேதமில்லாமல் ஓவியம் வழியே கடத்திச் செல்கிறார் புதுச்சேரியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் செளமியா.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் விஸ்காம் துறையில் சிறப்பு விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தவர், தற்போது அனிமேஷன் துறையில் ஃப்ரீலான்சராகப் பணியாற்றி வருகிறார். ஓவியத்தை முறையாகக் கல்லூரியில் படிக்காதபோதும் தன்னார்வத்தால் தொடர்ந்து வரைந்து வருகிறார். தன்னுடைய பி.எச்டி படிப்பைத் தொடங்க நினைத்து, ஆராய்ச்சிகளை மேற்கொண்டவருக்குப் பிற நாடுகளில், ஓவியர்கள் தங்கள் நாட்டு இலக்கியங்களை ஓவியமாக வரைந்தது தெரியவந்தது.

புதிய பரிமாணத்தில் குறள்
தமிழ் மொழியின் இலக்கியத்தைத் தன்னுடைய மொழியான ஓவியம் மூலம் ஏன் சொல்லக்கூடாது என்று யோசித்தவர், விளையாட்டாகக் கடந்த ஜனவரி மாதம் வரையத் தொடங்கினார். அவரின் முயற்சி குறித்துப் பேசுபவர், ''மக்களுக்குப் பரிச்சயமான திருக்குறளை, புதிய பரிமாணத்தில் அளிக்க ஆசைப்பட்டேன். ஒவ்வொரு குறளையும் வாசித்து, உள்வாங்கி அதை ஓவியமாக வரைந்து என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்ற ஆரம்பித்தேன்.

வழக்கமான வரைவதைத் தாண்டி வேறெதையும் நான் நினைக்காதபோதும் நண்பர்களின் தொடர் பாராட்டு, என்னைக் கூடுதல் பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வைத்தது. இதன்மூலம் என்னுடைய ஆராய்ச்சிக்கான ஓவியங்கள், வரையும் திறமை என்பதை விடுத்து மிகப்பெரிய சமுதாய விழிப்புணர்வை உணர்கிறேன்'' என்கிறார் செளமியா.

குறள் 218:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.

செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.

பொதுவாக ஒரு குறளுக்கு ஓர் ஓவியம் என்று வரைபவர், குறளில் வரும்அனைத்துச் சொற்களையும் அப்படியே ஓவியங்களாக மாற்றுவதில்லை. குறளின் மையப்புள்ளியை, வாழ்வியல் கருத்தை மட்டுமே ஓவியமாக வார்த்தெடுக்கிறார். சர்ரியலிச, உருவக ரியலிச பாணி ஓவியங்களைப் பின்பற்றி வரைபவர் அதற்கான காரணத்தையும் கூறுகிறார்.

சர்ரியலிச ஓவியங்கள்
''மக்களுக்கு எளிதில் புரியக்கூடிய வகையில் இருப்பவை சர்ரியலிச பாணி ஓவியங்கள். ரியலிசம் எனப்படும் வழக்கமான வரைமுறைகளைத் தாண்டி, எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா அதைப் பெரிதாக்கி, முன்னிலைப்படுத்தி வரைவதுதான். உதாரணத்துக்கு இதயத்தைப் பற்றிச் சொல்லும்போது அதை மட்டுமே வரைந்தால் போதும். இந்த பாணி ஓவியங்களில் படைப்பாளிகளுக்கு அதிக சுதந்திரம் இருக்கும். அதேபோல உருவக ரியலிசம் அடிப்படையில், நல்வினை, தீவினைகளை வேறுபடுத்திக் குறள் ஓவியங்களை வரைகிறேன்.

குறள் 250: வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.

அருள் இல்லாதவன் தன்னை விட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னை விட பலசாலி முன், அஞ்சி நிற்கும் நிலையை நினைக்க வேண்டும்.

பாரம்பரிய பாணி
பாரம்பரிய பாணியில் கையாலேயே முதலில் பேனாவைக் கொண்டு வரைந்தேன், இப்போது போட்டோ கலர்களைக் கொண்டு வரைகிறேன். 15*15 செ.மீ. என்ற அளவுக்குள் ஓவியங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன்.

முகத்தில் ஒவ்வோர் அங்கத்துக்கும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல், குறள் சொல்லும் பொருளை மட்டுமே விளக்குகிறேன். சராசரியாக ஓர் ஓவியத்தை வரைய 3- 4 மணி நேரங்கள் ஆகின்றன. சில ஓவியங்களுக்கு ஒருநாள் கூட ஆனதுண்டு. ஆனாலும் தினசரி தவறாமல் ஒரு குறளுக்கு ஓவியம் வரைந்து என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றி வருகிறேன்'' என்று புன்னகை புரிகிறார் செளமியா.

குறள் 223:
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.

ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும், ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் மட்டுமே உண்டு.

250 நாட்களாக 250 குறள்களைத் தாண்டி இவரின் தூரிகை ஓய்வில்லாமல் பயணித்து வருகிறது. 1,330 நாட்களில் அனைத்துக் குறளையும் முடிக்க இலக்கு வைத்து குறளோவியம் வரைந்து வருகிறார் செளமியா.

க.சே. ரமணி பிரபா தேவி தொடர்புக்கு--> ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x