Published : 11 Sep 2020 06:53 PM
Last Updated : 11 Sep 2020 06:53 PM

வசந்தகுமார் வாழ்க்கை  மட்டுமல்ல, மரணமும் நமக்கு சில பாடங்களை ஏற்படுத்தியுள்ளது: நினைவேந்தல் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

சென்னை

வசந்தகுமார் வாழ்க்கை மட்டுமல்ல; மரணமும் நமக்கு சில பாடங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவரும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். தடுப்பு ஊசியும் இல்லை- நோய் வந்தால் சிகிச்சைக்கு மருந்தும் இல்லை- என்ற நிலையில் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம் என வசந்தகுமார் நினைவேந்தல் கூட்டத்தில் ஸ்டாலின் பேசினார்.

இன்று (11-09-2020), திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும் மக்களவை உறுப்பினருமான மறைந்த எச்.வசந்தகுமார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரை வருமாறு:

“கரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றியதால் திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் அருமைச் சகோதரர் ஜெ.அன்பழகனை இழந்ததைப் போல, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரையும் இழந்திருக்கிறோம்.

வசந்தகுமாருக்கு நோய் தொற்றியிருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டதும், அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் உற்சாகமாகத் தான் பேசினார். அவரிடம் ஒரு பயமோ, பதற்றமோ இல்லை. அதனால் விரைவில் மீண்டு வந்துவிடுவார் என்று நம்பினேன்.

ஆனால் திடீரென்று உடல்நிலையில் பின்னடைவு, அபாயக்கட்டத்தில் இருக்கிறார் என்றெல்லாம் தகவல் வந்தபோது உண்மையில் நம்ப முடியவில்லை. இறுதியில் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாக வசந்தகுமாரைத் தெரியும் என்றாலும் 2006-ம் ஆண்டு அவர் சட்டமன்ற உறுப்பினராக வந்த பிறகு அதிகமாக நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

எப்போதும் சிரித்த முகம். அதுதான் அவரோட வெற்றிக்கு காரணம். எல்லா நிறுவனத்துக்கும் ஒரு பிராண்ட் வைத்திருப்பார்கள். அந்த பிராண்ட் தான் அந்த நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில் வசந்த் அண்ட் கோ-வின் வெற்றிக்கு உண்மையான காரணம், வசந்தகுமார் அவர்களின் அந்தச் சிரிப்பு தான்.

எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் அவர் முகம் சிரித்துக் கொண்டே இருக்கும். அத்தகைய சிரித்த முகத்துக்குச் சொந்தக்காரர் முதன்முதலாக நம்மை எல்லாம் அழ வைத்து விட்டுச் சென்றுவிட்டார். இந்த நாட்டு இளைஞர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு எத்தனையோ கருத்துகள் வசந்தகுமார் அவர்களின் வாழ்க்கையில் உண்டு.

வசந்தகுமார் அவர்களின் வாழ்க்கையைப் படிப்பதன் மூலமாக இளைஞர்கள் மிகப்பெரிய உயர்வை அடைய முடியும் என்று நான் கருதுகிறேன். இருபது வயது இளைஞராகச் சென்னைக்கு வந்து-இன்றைக்கு ஆயிரம் ஊழியர்கள் கொண்ட நிறுவனத்தை நடத்தும் அளவுக்கு உயர்ந்தார் என்றால் அது சாதாரணமானது அல்ல.

தொடக்க காலத்தில் விஜிபி நிறுவனத்தில் 70 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்திருக்கிறார். அவரது பணிகளைப் பார்த்து 300 ரூபாயாகச் சம்பளம் உயர்த்தி மேலாளராகவும் உயர்வைப் பெற்றிருக்கிறார். அதன்பிறகு சொந்தமாகத் தொழில் செய்ய நினைக்கிறார். ஆனால் கையில் காசு இல்லை. அவரிடம் இருந்தது ஒரே ஒரு சைக்கிள் மட்டும் தான். தனது நம்பிக்கையையே மூலதனமாக வைத்து நிறுவனத்தைத் தொடங்குகிறார். தன்னிடம் இருந்த சைக்கிளில் மடக்கு நாற்காலிகளைக் கட்டி எடுத்துச் சென்று விற்பனை செய்கிறார்.

மாதத்தவணைக்கு கொடுக்கிறார். அதன்பிறகு தொலைக்காட்சிப் பெட்டிகளை விற்பனை செய்கிறார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்த காலம் என்பதால் 1984-ம் ஆண்டுகளில் அதிகமாகத் தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனை ஆனது. அதன்பிறகு இவரே தொலைக்காட்சி பெட்டிகள், காற்றாடிகள் தயாரிக்கிறார். அதனுடைய விற்பனையைப் பார்த்து பெரிய நிறுவனங்களே இவரிடம் தங்களது பொருட்களைக் கொடுத்து விற்பனை செய்யச் சொல்கிறார்கள்.

இன்றைக்குத் தமிழகம், கேரளா, புதுவையில் மொத்தம் 86 கிளைகள் கொண்ட நிறுவனமாக வசந்த் அண்ட் கோ வளர்ந்துள்ளது என்றால் அதற்கு வசந்தகுமார் என்ற தனிமனிதரின் நம்பிக்கை, உழைப்பு, உற்சாகம் ஆகியவை தான் காரணம். வசந்தகுமார் ஒரு முறை சொன்னார்: “தொழில் தொடங்கிய நேரத்தில் என்னிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற ஆசை மட்டுமே இருந்தது. யாரிடமும் வேலை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்" என்று சொன்னார்.

முன்னேற வேண்டும் என்ற ஆசை தான் அவரை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியது. ஒரு தொழில் தொடங்குவதற்கு நிறையப் பணம் இருக்க வேண்டும், அதிகார பலம் இருக்க வேண்டும், உதவி செய்ய நிறையப் பேர் இருக்க வேண்டும் என்பது இல்லை; தன்னம்பிக்கையும், வெற்றி பெற வேண்டும் என்ற வெறியும் இருந்தால் போதும் என்பதை வசந்தகுமாரின் வாழ்க்கை காட்டுகிறது.

இன்னும் முக்கியமாகச் சொல்ல வேண்டுமானால், யாரிடம் அவர் பணியாற்றினாரோ அவரை வாழ்த்தும் வகையில் உயர்ந்தார். வசந்தகுமார் தொடக்க காலத்தில் விஜிபி நிறுவனத்தில் பணியாற்றினார். வசந்தகுமாரின் உழைப்பைப் பற்றி விஜிபி சந்தோஷம் அவர்கள் சொல்லும் போது, "எவன் ஒருவன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறானோ அவன் வாழ்க்கையில் மிகச்சிறந்த இடத்தை அடைவான் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் வசந்தகுமார்" என்று பாராட்டி இருக்கிறார்.

சாலிடர் டி.வி.யை தமிழகத்தில் அதிகம் பிரபலப்படுத்தியவர் வசந்தகுமார். அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியான வெங்கடேஷ் அவர்கள் சொல்லும் போது, "தனிமனிதன் ஒருவன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று வசந்தகுமார் சொல்வார். சொன்னதைச் செய்தும் காட்டினார்" என்று சொல்லி இருக்கிறார்.இப்படி தொழில் அதிபர்கள் பாராட்டையும் பெற்ற வசந்தகுமார் மறைந்துவிட்டார்.

வசந்தகுமார் வாழ்க்கை மட்டுமல்ல; மரணமும் நமக்கு சில பாடங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவரும் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். தடுப்பு ஊசியும் இல்லை- நோய் வந்தால் சிகிச்சைக்கு மருந்தும் இல்லை- என்ற நிலையில் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும் நிலையில் இருக்கிறோம்.

மத்திய அரசும் மாநில அரசும் மக்களை கைகழுவி விட்டன. உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டார்கள். சுகாதார உதவியும் இல்லை- பொருளாதார உதவியும் இல்லை- தார்மீக உதவிகளும் இல்லை- என்ற நிலையில் மக்களை மத்திய மாநில அரசுகள் கைவிட்டுவிட்டன.

கரோனா முற்றிலுமாக எப்போது ஒழியும் என்பது தெரியாது. கரோனா ஒழிந்தாலும் அதனால் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்த நாடும் நாட்டு மக்களும் மீள்வதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம். இத்தகைய நெருக்கடியான காலக்கட்டத்தில் அருமை நண்பர் வசந்தகுமார் அவர்களது மரணம் அதிக வருத்தத்தை அளிக்கிறது.

வசந்தகுமாரின் மறைவால் வாடும் அவரது மனைவி தமிழ்ச்செல்விக்கும், மகன்கள் விஜய்வசந்த், வினோத்குமார், மகள் தங்கமலர் ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் - வசந்தகுமார் அவர்களின் சகோதரரும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும் தமிழ்ச் சுரங்கமுமான குமரி அனந்தனுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரும் பாதுகாப்புடன் இருப்போம், அதே நேரத்தில் நமது கடமைகளைத் தொடர்வோம் என்று சொல்லி விடைபெறுகிறேன்”.

இவ்வாறு அவர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசினார்.



FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x