ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வடிகால் குழாய் அமைப்பு கண்டுபிடிப்பு; கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட அமைப்பை ஒத்துள்ளது- தொல்லியல் துறை அலுவலர்கள் தீவிர ஆய்வு

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வடிகால் குழாய் அமைப்பு கண்டுபிடிப்பு; கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட அமைப்பை ஒத்துள்ளது- தொல்லியல் துறை அலுவலர்கள் தீவிர ஆய்வு
Updated on
1 min read

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் வடிகால் குழாய் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் கடந்த மே 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக தொல்லியல் துறையின் அகழாய்வு கள இயக்குநர் பாஸ்கர், தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் ஆகியோர் தலைமையில் ஆய்வு மாணவர்கள், தொழிலாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதிச்சநல்லூரில் 72 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அகழாய்வு பணியில் தற்போது மக்கள் வாழ்விடங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தோண்டப்பட்ட குழியில் வீடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் வடிகால் குழாய் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட வடிகால் போலவே இந்த அமைப்பும் காணப்படுகிறது. இதன் மூலம் இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனை தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது நடைபெறும் அகழாய்வு பணி இம்மாதம் 28-ம் தேதியோடு நிறைவு பெறும் என கூறப்படுகிறது. எனவே, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து முழுமையாக அகழாய்வு செய்ய வேண்டும். மேலும், தாமிரபரணி கரையில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள 37 இடங்களிலும் அகழாய்வு நடத்த வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in