

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த மே 25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சிவகளையில் 26 குழிகளும், ஆதிச்சநல்லூரில் 72 குழிகளும் தோண்டப்பட்டு அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில் சிவகளையில் 31 முதுமக்கள் தாழிகளும், ஆதிச்சநல்லூரில் 24 முதுமக்கள் தாழிகளும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிவகளையில் முதுமக்கள் தாழிகளை திறந்து உள்ளே இருக்கும் பொருட்களை ஆய்வு செய்யும் பணி கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது. இதுவரை 19 முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டுள்ளன.
அதில் இருந்து கருப்பு, சிவப்பு மண் பாண்டங்கள், கிராவிட்டி குறியீடுகள், புள்ளிகளுடன் கூடிய மண் பாண்டங்கள், கரித்துண்டுகள், எலும்புகள் மற்றும் தாடைகள், நெல்மணிகள், நாணயங்கள், கூஜாக்கள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டன. தொடர்ந்து முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
அதுபோல ஆதிச்சந்நலூரில் அகழாய்வு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகளை மற்றும் ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலில் சிவகளை வந்த அவர், அங்கு நடைபெறும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார். சிவகளை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் சாமியானா பந்தல் போடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
அவைகளை பார்வையிட்ட உதயச்சந்திரன், அந்த பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவ, மாணவியர், பொதுமக்கள் என ஏராளமானோர் அந்த பொருட்களை பார்வையிட்டனர்.
தொடர்ந்து ஆதிச்சநல்லூர் சென்ற உதயச்சந்திரன், அங்கு நடைபெறும் அகழாய்வு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரது முன்னிலையில் ஒரு முதுமக்கள் தாழி திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அதனுள் மனித எலும்புகள் இருந்தன. அவைகளை ஆய்வுக்கு அனுப்புவதற்காக தொல்லியல் துறை அதிகாரிகள் பத்திரமாக சேகரித்தனர். தொடர்ந்து ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் புளியங்குளம் முதுமக்கள் தாழி மையத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவைகளை அவர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், கள இயக்குநர் பிரபாகரன், தொல்லியல் அலுவலர் தங்கதுரை, பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் ராஜன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வரலாற்று ஆசிரியர் சிவகளை மாணிக்கம் மற்றும் ஊராட்சித் தலைவர்கள், ஊர் பிரமுகர்கள் உடனிருந்தனர்.