

கடுமையான பணி நெருக்கடிக்கு மத்தியில் 108 பிரபலங்களின் குரல்களில் பாடல்களைப் பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் அரசு அதிகாரியான நன்னிலம் கேசவன்.
நாகர்கோவிலில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்தார் நன்னிலம் கேசவன். சென்னையில் ஜிஎஸ்டி மற்றும் கலால் வரித்துறைக் கண்காணிப்பாளராக இருக்கும் இவர், மைக் பிடித்துப் பாடத் தொடங்க ஜேசுதாஸ்தான் வந்துவிட்டாரோ என தேடுகிறார்கள் பார்வையாளர்கள். அப்படியே தனது குரலில் சுசீலாவையும் கூட்டி வந்துவிடுகிறார். மொத்த அரங்கையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய நன்னிலம் கேசவன் 108 குரல்களில் பாடி அசத்தும் சாதனையாளர்.
இது குறித்து ’இந்து தமிழ்’ இணைய தளத்திடம் அவர் பேசிய போது, “திருவாரூர் மாவட்டத்தின் நன்னிலம் எனது சொந்த ஊர். குடும்பத்தோடு தஞ்சாவூரில் இருக்கிறோம். நான் பணி நிமித்தம் சென்னையில் இருக்கிறேன். எனது அம்மா சுந்தரம்மாள் இயல்பாகவே நன்றாகப் பாடுவார். ஆனால், முறைப்படி சங்கீதம் படித்தவர் இல்லை. அம்மாவின் பாடல் என்பது கிராமிய வாழ்க்கைச் சூழல் சார்ந்து இருக்கும்.
ஒப்பாரிப் பாடல், வயலில் நாற்று நடும்போது பாடும் பாடல் எனக் கேட்கவே ரம்மியமாக இருக்கும். அந்தப் பாடல்களுக்குள் வாழ்க்கைக்கான அர்த்தங்கள் பொதிந்து கிடக்கும். அம்மாவைப் பார்த்து வளர்ந்ததால் பாடல் குறித்த ஆர்வம் எனக்குள்ளும் இருந்தது. தொடக்கத்தில் பாத்ரூம் பாடகராகத்தான் இருந்தேன். நான் ஓரளவுக்கு நன்றாகப் பாடுவேன் என்பது எனது நெருங்கிய நட்பு வட்டத்துக்கு மட்டுமே தெரியும்.
நான் முதன் முதலில் பாடியது இப்போதும் நினைவில் இருக்கிறது. 1997-ல் சென்னையில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ஒரு திருமணத்துக்காகப் போயிருந்தேன். அப்போது அங்கே ஆர்கெஸ்ட்ரா நடத்த வேண்டியவர்கள் வந்து சேரவில்லை. அதைப் பார்த்துவிட்டு நண்பர்கள்தான் ‘கேசவா நீ பாடேன்’ என கேட்டனர். அப்போது, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற பாடலைப் பாடினேன். அதற்குக் கிடைத்த கைதட்டும், வரவேற்பும் அதன்பின் என்னை உற்சாகமாக மைக் பிடிக்க வைத்தது.
அதன் பின்னர் விழுப்புரம் வெங்கலஸ்ரீ என்பவரிடம் முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டேன். நேரம் கிடைக்கும்போது இசைக் கச்சேரிகளும் நடத்தி வருகிறேன். ஜானகி அம்மா, சுசீலா அம்மா குரல்கள் உள்பட மொத்தம் 108 குரல்களில் பாடுவேன். என்னை நானே தொடர்ந்து மெருகேற்றிக் கொண்டே வருகிறேன்” என்றார்.
108 குரலில் பாடி அசத்தும் திறமைக்காக மெல்லிசைத் திலகம், இசைத்திலகம், கவிஞர் வைரமுத்துவின் கையால் சிறந்த கலைச்சேவைக்கான விருது எனப் பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார் நன்னிலம் கேசவன். இவரது திறமையைப் பாராட்டி உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிக் கவுரவித்துள்ளது.