ஆளும்கட்சியினர் தலையீட்டால் ஊராட்சி செயலர்கள் இடமாறுதலில் குளறுபடி: ஊரக வளர்ச்சித்துறையினர் போராட்டம் நடத்த முடிவு

ஆளும்கட்சியினர் தலையீட்டால் ஊராட்சி செயலர்கள் இடமாறுதலில் குளறுபடி: ஊரக வளர்ச்சித்துறையினர் போராட்டம் நடத்த முடிவு
Updated on
1 min read

ஆளும்கட்சியினர் தலையீட்டால் ஊராட்சி செயலாளர்கள் பணி மாறுதலில் பல்வேறு குளறுபடி நடந்துள்ளன. இதைக் கண்டித்து ஊரக வளர்ச்சித்துறையினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற ஊராட்சித் தலைவர்களில் சிலர் ஊராட்சி செயலர்கள் தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என கூறி, இடமாறுதல் செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் பல ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர்.

இந்த இடமாறுதலில் ஆளும்கட்சியினர் தலையீட்டால் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. திருப்பத்தூர், திருப்புவனம் உள்ளிட்ட ஒன்றியங்களில் இடமாறுதல் உத்தரவுகள் அடிக்கடி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகளால் ஊராட்சி செயலர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.

அரசில்கட்சியினர் தலையீட்டை கண்டித்து தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும் இதேநிலை நீடித்தால் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஊரகவளர்ச்சித்துறையினர் கூறியதாவது: ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதலில் இதுவரை இல்லாத அளவிற்கு அரசியல்கட்சியினர் தலையீடு உள்ளது.

இதனால் எந்த பணியும் செய்ய முடியவில்லை. பல ஊராட்சிகளில் ஊராட்சி செயலர்களுக்கு 5 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை.

பலமுறை கோரிக்கை வைத்தும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு இடமாறுதல் வழங்கவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட உள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை, என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in