கல்லுரி பருவத் தேர்வை தள்ளி வைக்கக் கோரி காரைக்காலில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்
Updated on
1 min read

புதுச்சேரியில் உள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடத்தப்படவுள்ள பருவத் தேர்வு உள்ளிட்ட பிற கல்லூரிகளின் இறுதிப் பருவத் தேர்வு அனைத்தையும் ஒத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (செப்.11) காலை கல்லூரி மாணவர்கள் சுமார் 25 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர்கள் கூறுகையில், "புதுச்சேரி சட்டக் கல்லூரியில் செப்.14-ம் தேதி முதல் பருவத் தேர்வு தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பேரிடர் சூழல் காரணாமக கடந்த மார்ச் 14-ம் தேதி மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதுவரை எங்களால் கல்லூரி நூலகத்தைப் பயன்படுத்த முடியவில்லை, கல்வி தேவைக்கான எந்தவொரு தரவுகளையும் பெற இயலவில்லை. ஆன்லைன் வகுப்புகளில் இந்த பருவத்துக்கான பாடத்திட்டம் முழுமையும் முடிக்கப்படவில்லை.

புதுச்சேரி, காரைக்காலில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் விடுதியில் தங்கிப் படிக்கும் நாங்கள் காரைக்காலிலிருந்து கல்லூரிக்கு சென்று தேர்வு எழுதுவது என்பது மிகவும் சிரமமானதாக இருக்கும். தங்குவதற்கான ஏற்பாடுகள், போக்குவரத்து ஏற்பாடுகள் உகந்த வகையில் இல்லை.

கரோனாவால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ஆன்லைன் மூலம் தேர்வு எழுதலாம் என புதுச்சேரி பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இந்தப் பருவத்துக்கான பாடத்திட்டம் முழுமையாக நடத்தப்படவில்லை என்பதோடு ஆன்லைன் மூலம் தேர்வு எழுதுவதற்கான பயிற்சி எதுவும் மாணவர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படியான நிலையில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வது மிகுந்த சிரமமானது. மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். நாங்கள் தேர்வை ரத்து செய்யுமாறு கேட்கவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தள்ளி வைக்குமாறு மட்டுமே கேட்கிறோம். இது குறித்து ஏற்கெனவே புதுச்சேரி கல்வி அமைச்சர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் கோரிக்கைகள் விடுத்துள்ளோம். ஆனால் எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இதே போன்ற சூழல்தான் பிற கல்லூரிகளின் மாணவர்களுக்கும் உள்ளது. அதனால் அரசு கலை, அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் சிலரும் எங்களுடன் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்" என தெரிவித்தனர்.

தொடர்ந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் காரைக்கால் நகர காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்று அதிகாரிகளிடம் கோரிக்கை குறித்து எடுத்துக் கூறிய பின்னர் போராட்டத்தைக் கைவிட்டு சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in