Published : 11 Sep 2020 02:27 PM
Last Updated : 11 Sep 2020 02:27 PM

அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றாலத்தில் கடைகளின் வாடகைக் கட்டணம் உயர்வு: விக்கிரமராஜா குற்றச்சாட்டு

அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றாலத்தில் கடைகளின் வாடகை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

தொடர்ந்து ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறும்போது:

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு பல்வேறு தளர்வுகள் வழங்கப்படும் நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும். அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான மையங்களை திறப்பதற்கும் அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

அங்கு 3 மாத காலம் தான் சீசன். இப்போது அங்கு குளிப்பதற்கும். தங்குவதற்கும் அனுமதி அளிக்கவில்லை என்றால் பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளின் குடும்பத்தின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிடும்.

குற்றாலத்தில் கடை வாடகை என்பது 456 விதியின்படி செயல்படுத்த வேண்டும். சில அதிகாரிகள் 70, 80 சதவீதம் என தான்தோன்றித்தனமாக வாடகையை உயர்த்தி, வியாபாரிகளை பாதிக்கும் உள்நோக்கத்தோடு, அரசை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு செயல்படுவதாக நாங்கள் அறிகிறோம். எனவே நியாயமான வாடகை விகிதத்தை செலுத்துவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இதேபோல், பாளையங்கோட்டையில் 550-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை கரோனா தொற்று மையத்தில் அப்புறப்படுத்தி விட்டு, மீண்டும் உள்ளே அனுமதிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை மாநகராட்சி விதித்து வருகிறது.

குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்கு நாங்கள் முறையில் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம். ஆனால் அதை காரணம் காண்பித்து இதோடு இவர்களை காலி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக நாங்கள் அறிகிறோம். பாளையங்கோட்டை மார்க்கெட் வியாபாரிகள் உடனடியாக வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

ஏற்கெனவே எங்கள் வாழ்வுரிமை 6 மாத காலம் பறிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழக்கக் கூடிய நிலை ஏற்படும். மீண்டும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு போராட்டத்தை கையில் எடுக்கக் கூடிய நிலை வந்து விடக்கூடாது என்பதை எச்சரிக்கை உணர்வுடன் பதிவு செய்கிறேன்.

தமிழகம் முழுவதும் அரசு விதித்த விதிகளின்படி திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து நிறுவனங்களையும் திறந்தால் தான் வாழ்வாதாரம் சிறக்கும், என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x