

எண்ணூரில் அனல் மின்நிலையம் அமைக்க பெல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.
சென்னை எண்ணூரில் 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு மின்நிலையங்களை டான் ஜெட்கோ அமைக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தில் பெல் நிறுவனமும், சீனாவைச் சேர்ந்த நிறுவனமும் பங்கேற்றன. இதில் பெல் நிறுவனத்துக்கு செப்டம்பர் 27-ல் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து சீன நிறுவ னத்தின் நிர்வாக இயக்குநர் சஞ்சய் கே.பிள்ளை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக் கல் செய்தார். அந்த மனுவில், பெல் நிறுவனம் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்திருந் தோம். அதை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தர விட்டது. இருப்பினும், அந்த உத்தரவை நிறைவேற்றாமல் பெல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பெல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதில் முறை கேடு நடைபெறவில்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சீனா நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், கே.பி.கே.வாசுகி ஆகியோர் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்தனர்.
நீதிபதி ஆர். சுதாகர் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பணிபுரிவதால், இந்த வழக்கில் அவர் நேற்று தீர்ப்பளித்தார். அதில் கூறியிருப்பதாவது: எண்ணூர் அனல் மின்நிலையம் அமைக்க, பெல் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. இரு நிறுவனங்களின் ஒப்பந்தம் இடையே பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. இந்தத் தொகையை வேறு திட்டங்க ளுக்குப் பயன்படுத்தலாம். சீன நிறுவனத்தின் மேல்முறையீடு மனு ஏற்கப்படுகிறது. இரு நிறுவனங்களின் ஒப்பந்தப் புள்ளி களை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.