Last Updated : 11 Sep, 2020 01:14 PM

 

Published : 11 Sep 2020 01:14 PM
Last Updated : 11 Sep 2020 01:14 PM

தென்காசியில் மேலும் ஒரு மியாவாகி சிறு வனத்தை உருவாக்க முயற்சி

தென்காசி, ஆசாத் நகரில் சிற்றாற்றின் குறுக்கே 2 பாலங்கள் உள்ளன. இந்தப் பாலங்களுக்கு இடேயே உள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான காலி இடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குப்பைமேடாகக் கிடந்தது.

இந்த இடத்தில் 2 ஆண்டுகளில் மியாவாகி சிறு வனத்தை ப்ராணா மரம் வளர் அமைப்பினர் உருவாக்கியுள்ளனர். நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் உரிய அனுமதி பெற்று சுமார் 3 அடி ஆழத்துக்கு தேங்கிக் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டு, இயற்கை உரங்களைப் போட்டு, மரங்கள் வளர்வதற்கு உகந்த மண்ணைக் கொட்டி இடத்தைத் தயார் செய்தனர்.

இதில், 2 முதல் 3 அடி இடைவெளியில் மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் மரம் நடும் பணியில் ஈடுபட்டனர். குறுகிய இடத்தில் மரங்கள் வளர்ந்து சிறு வனமாக காட்சியளிக்கிறது. இந்த மியாவாகி அடர்வனத்தை 2 ஆண்டில் உருவாக்கி உள்ளனர். இதில் 45 வகையான 750 மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், தென்காசி நகரில் மேலும் ஒரு மியாவாகி சிறு வனத்தை உருவாக்கும் முயற்சியை ப்ராணா மரம் வளர் அமைப்பினர் தொடங்கி உள்ளனர்.

தென்காசியில் இருந்து ஆயிரப்பேரி செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்துக்கு தென்பகுதியில் சிற்றாற்றுப் படுகை உள்ளது. நீதிமன்றத்துக்கும், சிற்றாற்று பாலத்துக்கும் இடையே உள்ள பகுதி கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டிக் கிடந்தது. மேலும், கட்டிடக் கழிவுகளும் கொட்டப்பட்டு இருந்தன. இந்த இடத்தை சுத்தப்படுத்தி, மியாவாகி அடர் வனத்தை உருவாக்க ப்ராணா மரம் வளர் அமைப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மரக்கன்றுகள் நடுவதற்கு தயார் செய்வதற்காக இந்த இடத்தில் உள்ள கருவேல மரங்களை அகற்றி, சுத்தப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ப்ராணா மரம் வளர் அமைப்பினர் கூறும்போது, “தென்காசி ஆசாத் நகரில் உருவாக்கியதுபோல் இங்கும் மியாவாகி சிறு வனத்தை உருவாக்க பொதுப்பணித் துறையில் அனுமதி பெற்று பணி தொடங்கப்பட்டுள்ளது. இடத்தை சுத்தப்படுத்தி தயார்படுத்த சில நாட்கள் ஆகும். தென்காசி நகராட்சியிடம் இருந்து இயற்கை உரங்களைப் பெற்று, நிலத்தை தயார் செய்ய இருக்கிறோம். இந்த முயற்சிக்கு பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

தென்காசியில் மையப்பகுதியாக உள்ள இந்த இடத்தில் கட்டிட கழிவுகளும், கோழி இறைச்சிக் கழிவுகளும் கொட்டப்பட்டு வந்தன. இந்த இடத்தில் அடர்வனத்தை உருவாக்கினால் நகரமும் சுத்தமாகும். ஆற்றுப்படுகை என்பதால் இலுப்பை, நீர் மருது, அரசு, புன்னை உட்பட ஆற்றங்கரையோரம் வளரக்கூடிய மரக்கன்றுகளை நட்டு வளர்க்க உள்ளோம்.

இதில் ஆயிரம் முதல் 2 ஆயிரம் மரம் வரை வளர்க்கலாம். இடத்தை சீரமைப்பதற்காக பொக்லைன் இயந்திர உதவியையும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கொடுத்து உதவியுள்ளனர். முள் புதரை அப்புறப்படுத்தினால்தான் எவ்வளவு இடம் இருக்கிறது என்பதை கண்டறிய முடியும். வேலி அமைத்து, மரக்கன்றுகள் நடும்போது பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஒத்துழைப்பை கேட்க இருக்கிறோம். மரக்கன்றுகளை வளர்க்க ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம். இந்த இடம் சில ஆண்டுகளில் அடர் வனமாக மாறிவிட்டால் அழகாக காட்சியளிக்கும்” என்றனர்.

ஜப்பானைச் சேர்ந்த அஹிரா மியாவாகி என்பவர் மரங்களை நெருக்கமாக நட்டு குறுங்காடுகளை உருவாக்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.

ஒன்றரை அடி முதல் 5 அடி வரை இடைவெளியில் நட்டு வளர்க்கப்படும் மரங்கள் சூரிய ஒளியைத் தேடி வேகமாக வளர்வதால் சாதாரணமாக வளர்க்கப்படும் மரங்களை விட 10 மடங்கு வேகமாக வளர்கின்றன என்பதை நிரூபித்துக் காட்டினார். அவ்வாறு அடர் முறையில் வளர்க்கப்படும் காடுகள் மியாவாகி காடுகள் எனப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x