Last Updated : 11 Sep, 2020 01:15 PM

 

Published : 11 Sep 2020 01:15 PM
Last Updated : 11 Sep 2020 01:15 PM

'இனி நான் பேச மாட்டேன், என் பெட்ரோல் பேசும்'- அதே காட்சிகள்... அதே ராமர் பிள்ளை!

தமிழ் கூறும் நல்லுலகு மறந்தே போயிருந்த ராமர் பிள்ளை விரைவில் மறுபடியும் வெளிச்ச வட்டத்தில்! மூலிகையில் இருந்தே பெட்ரோல் எடுக்கும் ரகசியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று அறிவித்து... மீண்டும் மீண்டும் பல சோதனைகளுக்கு உட்பட்டு, இந்தக் கண்டுபிடிப்பின் உண்மைத் தன்மை பற்றி உறுதி ஆகாமலே 21 ஆண்டுகள் ஓடிப்போன நிலையில்...கடந்த வாரம் மதுரைக்கு வந்திருந்தார் ராமர் பிள்ளை.

"9-ம் தேதி இதே மதுரையில் மூலிகை பெட்ரோல் விற்பனையை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைப்பேன்" என்று சொல்லியிருந்தார். அவர் வருவார், அவருடன் சில சந்தேகங்களைக் கேட்க வேண்டும் என்று நானும் கேள்விகளோடு தயாராக இருந்தேன். கடைசி வரையில் அவர் மதுரைக்கு வரவில்லை. அவரது மதுரை டீலர் என்று சொல்லப்படும் 'புல்லட்' ராஜதுரை என்னும் காங்கிரஸ்காரரைத் தொடர்பு கொண்டேன்.

"அண்ணனுடன் ராஜபாளையத்தில் இருக்கிறேன். அவரது அம்மா இந்த சந்தோஷமான நிகழ்வை என் கண் முன்னால்தான் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டதால், நிகழ்ச்சியை ராஜபாளையத்தில் நடத்துகிறார் ராமர் பிள்ளை. இதோ அவரிடம் பேசுங்கள்" என்று போனைக் கொடுத்தார்.
இனி உரையாடல்...

சார், நீங்க மதுரைக்கு வருவீங்க என்று பார்த்தோம்... ஆனால், ராஜபாளையத்திலேயே வைத்து பிரஸ்மீட்டெல்லாம் நடத்திவிட்டீர்கள் போலிருக்கே..?

ஆமாம் சார். பத்திரிகையாளர்கள் முன்பு ஒரு 'டெமோ' செய்து காட்டினேன். சாக்கடைத் தண்ணீரை எல்லோரிடமும் கொடுத்து, "இது சாக்கடைதானே? நன்றாக முகர்ந்து பாருங்கள்" என்றேன். அவர்களும், "பயங்கரமாக நாறுகிறது. சாக்கடைதான். பக்கத்தில் கொண்டு வர வேண்டாம்" என்றார்கள். அதைக் கொண்டு அவர்கள் கண் முன்னாலேயே, பெட்ரோல் தயாரித்து பைக்கில் ஊற்றி, ஓட்டியும் காட்டினேன். அதேபோல நல்ல தண்ணீரையும் பெட்ரோலாக மாற்றிக் காட்டினேன். எல்லாவற்றையும் இன்ச் பை இன்ச்சாக எல்லோரும் பார்க்கும்படி செய்தேன். பிறகு இந்த பெட்ரோல் தயாரிப்புப் பணியை இனி கேரளத்தைச் சேர்ந்த கினீன் டெக் என்ற கம்பெனியே செய்யும் என்று அறிவித்து அதற்கான ஆவணங்களையும், கேட்டலிஸ்ட் (வினையூக்கி)-ஐயும் அவர்களிடம் ஒப்படைத்தேன். இதுதான் நடந்தது.

இதேபோல் ஏற்கெனவே நீங்கள் அறிவித்து, மூலிகைப் பெட்ரோல் ஏஜென்ஸியெல்லாம் கொடுத்து... அப்புறம் ஒன்றும் ஆகவில்லையே..?

இந்த முறை பாருங்க. இந்த கேரள நிறுவனத்துடன் நான் செய்து கொண்ட ஒப்பந்தம் என்னவென்றால், முதல் 10 லட்சம் லிட்டர் வரையில், ஒரு லிட்டரை 39 ரூபாய்க்கு விற்கலாம். 10 லட்சம் லிட்டரைத் தாண்டும்போது ஒரு லிட்டரை 20 ரூபாய்க்குத்தான் விற்க வேண்டும். 1 கோடி லிட்டரைத் தாண்டும்போது, 10 ரூபாய்க்குத்தான் விற்பார்கள். ஏனென்றால், என்னுடைய பங்குத்தொகையை நான் அதற்கேற்றபடி குறைத்துக்கொள்வேன். அதே நேரத்தில் என்னைப் பாராட்டி, சீராட்டி வளர்த்த தமிழகத்தின் நன்மைக்காக இங்கே மட்டும் நானும், எனது நண்பர்களும் பெட்ரோலை நேரடியாக விற்பனை செய்யப் போகிறோம். இந்த 20 ஆண்டுகளாக எனக்கு நிதியுதவி செய்து, பிரச்சினைகளின்போது தோள்கொடுத்ததற்காக இந்த நன்றிக்கடன்.

இதற்கு அரசுத் தரப்பில் அனுமதி கொடுத்து விட்டார்களா?

சென்னையில் இதனை ஒரு தொழிலாகப் பதிவு செய்து ஜிஎஸ்டி நம்பரே வாங்கிவிட்டேன். தீயணைப்புத் துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை போன்ற சின்னச் சின்ன (?!) அனுமதிகள்தான் வாங்க வேண்டும். ஏற்கெனவே 2018-ல் இந்திய ராணுவத்தின் முன்னால், பெட்ரோல் தயாரித்துக் காட்டினேன். பிறகு இந்த ஆண்டும் செய்து காட்டினேன். அவர்கள் கொடுத்த 50 லிட்டர் தண்ணீரில், 10 லிட்டர் பெட்ரோல், 40 லிட்டர் டீசல் தயாரித்தேன். அவர்கள் அசந்து போனார்கள். வருடத்திற்கு 1 கோடி லிட்டர் பெட்ரோலை, ராணுவத்துக்குத் தருவதாகச் சொல்லியிருக்கிறேன். இதற்கு எனது நண்பரான மிக முக்கிய ஆடிட்டர் பிரமுகர் உதவுவதாகச் சொல்லியிருக்கிறார்.

ராணுவம் என்றால், எந்தப் பிரிவு? எந்த அதிகாரி?

முதலில் கடற்படையிடம் செய்து காட்டினேன். பிறகு ராணுவத்திடம். எல்லாம் அந்தந்தப் பிரிவு தலைமையிடம்தான்! தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். சென்னையில் சீக்கிரமே பத்திரிகையாளர்களிடம் அதற்கான ஆவணங்கள் எல்லாவற்றையும் காட்டுகிறேன்.

ஏற்கெனவே உங்களைப் பேட்டியெடுத்த பத்திரிகையாளர்களும் சரி, உங்கள் தயாரிப்பு முறையை ஆய்வு செய்த அதிகாரிகளும் சரி, 'நீங்கள் ஏதோ வித்தை காட்டுகிறீர்கள்' என்றுதான் சொன்னார்களே தவிர, யாருமே 'ராமர்பிள்ளை அறிவியல் முறைப்படிதான் இதைச் செய்கிறார்' என்று சொல்லவில்லையே?

யாருமே கோவணம் கட்டாத ஊரில், ஒரே ஒருவன் கோவணம் கட்டினால் என்ன நடக்குமோ... அதுதான் எனக்கும் நடந்தது. 21 வருடத்தில் எத்தனையோ பிரச்சினைகள். எல்லாச் சோதனையில் இருந்தும் மீண்டு வந்திருக்கிறேன். ஐஐடி என்ன சொன்னது, இவர் மெழுகு போல எதையோ கலக்கிறார் என்றார்கள். ஆனால், நீதிமன்றம் அப்படி எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டது. இப்படி நிறைய ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன. அப்துல் கலாம் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், எனக்கு இந்தப் பிரச்சினைகள் எல்லாம் வந்திருக்காது.

ஏற்கெனவே, மூலிகைப் பெட்ரோல் என்று விற்று மோசடி செய்து, சிறைக்குச் சென்றதாகச் செய்திகள் வந்ததே... இம்முறை அப்படி எதுவும் பிரச்சினை வராது என்று நம்பலாமா?

அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத சிபிஐ அதிகாரிகள், எனக்கு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்ததாக, தங்கள் லெட்டர் பேடில் பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்து விட்டார்கள். அதனால் தவறான செய்தி வந்துவிட்டது. ஆனால், உண்மையில் அன்று இரவு 11 மணி வரையில் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்ததும் என்னை நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. பெட்ரோலில் எந்தக் கலப்படமும் இல்லை என்றும், மார்க்கெட்டிங்கில்தான் பிரச்சினை என்றும் சொல்லி, அபராதம் விதித்தார்கள்.

ஜனவரி மாதம் சென்னையில் பெட்ரோல் விற்பனையைத் தொடங்கிய நீங்கள், பிப்ரவரி 27-ம் தேதி முதல் விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் பெட்ரோல் விற்பனை தொடங்கும் என்று அறிவித்தீர்கள். டீலர்களுடன் ஒப்பந்தம் போட்டதாகவும் சொன்னீர்கள். ஆனால், அதன் பிறகு ஆளையே காணவில்லையே?

அது பெரிய கதை. இரண்டு கம்பெனிகள் என்னை ஏமாற்றிவிட்டன. பிறகு நாகர்கோவிலில் 3 இளைஞர்களின் உதவியுடன் மூலிகை பெட்ரோல் தயாரிப்பை நவீனமயமாக்கும் வேலைகளைச் செய்திருந்தேன். மொத்தம் 30 லட்சம் செலவு. உற்பத்தியைத் தொடங்குகிற நேரத்தில், டெக்னிக்கல் எரர் ஆகிவிட்டது. அதைக் கண்டுபிடித்து சரி செய்வதற்குள் என்னுடைய அப்பா இறந்துவிட்டார். 16-வது நாள் காரியம் எல்லாம் முடித்து, மறுபடியும் வேலையைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தேன்.

சென்னையில் பெட்ரோல் தயாரிப்புக்கு மெஷினரி வாங்க ஆர்டர் கொடுத்திருந்தோம். டெலிவரி எடுக்கப்போகிற நேரத்தில் பொருளாதார ரீதியில் அடி. இதற்கிடையே, என்னுடைய மூலிகைப் பெட்ரோலுக்கு எதிரான வழக்கில், பெட்ரோல் தயாரிப்புக்குத் தடையில்லை என்று சொன்ன நீதிமன்றம், இறுதித் தீர்ப்பை மார்ச் 27-ம் தேதி கொடுப்பதாகச் சொன்னது. என்னைக் கெடுப்பதற்கென்றே கரோனா வந்துவிட்டது போல. மார்ச் 24-ம் தேதியே ஊரடங்கு வந்துவிட்டது. அதனால்தான் இவ்வளவு தாமதம்.

இந்த தடவையாவது அப்படி எல்லாம் ஆகாது என்று நம்பலாமா?

இது தான் என்னுடைய கடைசிப் பேட்டி. இனிமேல் நான் பேச மாட்டேன், என்னுடைய பெட்ரோல்தான் பேசும். என்னுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட தயாரிப்பாளர்கள்தான் இனி பேசுவார்கள்... பாருங்கள்.!

இவ்வாறு ராமர் பிள்ளை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x