

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் நுண்உரத்தில் பல்வேறு வகையான மரம், செடி, கொடிகளை சாகுபடி செய்யும் பணி நடந்து வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சியில் நாள்தோறும் உருவாகும் 102 டன் மக்கும் குப்பை, மாநகரில் 40 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நுண் உரம் தயாரிக்கப்படுகிறது. இப்பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். குப்பையை பல்வேறு கட்டமாக மக்கவைத்து 30 முதல் 40 நாட்களுக்குள் உரமாக்குகிறார்கள். இதனை, கிலோவுக்கு ரூ.3 என்ற விலையில் மாநகராட்சி விற்பனை செய்கிறது. குடியிருப்பு நலச் சங்கங்களைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் நுண்உரத்தை வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
மாநகராட்சியின் நுண் உர மையங்களில் தயாரிக்கப்படும் உரங்களால் பயனுள்ள தாவர வகைகளை உருவாக்க முடியும் என்று, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 40 மையங்களின் அருகேயும் சிறு தோட்டங்களை மாநகராட்சி உருவாக்கியுள்ளது. இத்தோட்டங்களில் கரும்பு, பழ மரங்கள், காய்கறிச் செடிகள், மூலிகைச் செடிகள் சாகுபடி செய்துள்ளனர். இவற்றிலிருந்து கிடைக்கும் காய், கனி, கீரைகளை அன்றாடம் அறுவடை செய்து விற்பனை செய்கிறார்கள்.
இதுகுறித்து, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.நடராஜன் கூறும்போது, ``தாழையூத்து சங்கர் காலனி பகுதியில் அமைந்துள்ள நுண் உரம் தயாரிப்பு மையத்தின் அருகேயுள்ள பூங்காவில் பூஞ்செடி களை உருவாக்கியிருக்கிறோம். இப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் மிகுந்த ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். வேலவன் காலனி பகுதியில் ஆப்பிள் மரத்தை வளர்த்து வருகிறோம். சில மையங்களில் கோழிகளையும் வளர்க்கிறோம். அவற்றுக்கான உணவு அந்தந்த மையங்களிலேயே கிடைக்கிறது” என்று தெரிவித்தார்.
பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் பிரேம் ஆனந்த் கூறும்போது, ``மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து வழங்குவது குறித்து மாநகர மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மாநகரில் பூங்காக்கள், சாலையோரங்கள், வீதிகளில் மரக்கன்றுகளை நடும் பணியில் தொடர்ந்து ஈடுபடுகிறோம். இந்த மரக்கன்றுகளுக்கு நுண் உரத்தையிடுகிறோம்” என்று தெரிவித்தார்.