

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு எதிராக மீண்டும் பொன் ராதாகிருஷ்ணனை களம் இறக்கினால் வெற்றிவாய்ப்பு சாதகமாக அமையுமா? என, பாஜகவின் மத்திய தகவல் தொழில்நுட்ப பிரிவினர் குமரியில் ஒரு வாரமாக முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் கடந்த 28-ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்துகன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீட் வாங்க போட்டி
இதற்குள் கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மற்றும் பாஜகவில் பலரும் தயாராகி வருகின்றனர். காங்கிரஸ் தரப்பில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தை போட்டியிடச் செய்வதன் மூலம், அனுதாப வாக்குகளைப் பெறலாம்என, காங்கிரஸ் தலைமை முதலில் கருதியது. அதேநேரம், அக்கட்சியின் சீனியர் தலைவர்கள் கட்சி தலைமையிடம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக தரப்பில், தங்கள் வசமிருந்து, கடந்த தேர்தலில் இழந்த கன்னியாகுமரி தொகுதியை இடைத்தேர்தலில் கைப்பற்ற பாஜக முழு முயற்சி எடுத்து வருகிறது. நயினார் நாகேந்திரன் போன்ற பாஜக பிரமுகர்கள் வெளிப்படையாக இங்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். வசந்தகுமாருடன் போட்டியிட்டு 2,59,933 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனே மீண்டும்பாஜக வேட்பாளராக களம் இறங்குவதற்கான வாய்ப்பு அதிகமாகஉள்ளது. சமூக வலைத்தளங்களில் இப்போதே பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரம் தொடங்கியுள்ள்து.
இந்தியாவின் செண்டிமென்ட் தொகுதியாக கருதப்படும் கன்னியாகுமரியை கைப்பற்றியே ஆகவேண்டும் என பாஜக தலைமைவியூகம் அமைத்து வருகிறது. இதற்காக, 11 பேர் அடங்கிய பாஜகவின் மத்திய தகவல் தொழில்நுட்ப பிரிவினர் கடந்த ஒரு வாரமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் முகாமிட்டு, பாஜகவின் செல்வாக்கு குறித்த கருத்து கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படியுள்ளது? தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணனின் செல்வாக்கு எவ்வாறு உள்ளது? என,துல்லிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். கட்சிக்குள் பொன். ராதாகிருஷ்ணனுக்கு 30 சதவீதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் மத்தியஇணை அமைச்சராக இருந்தபோது மாவட்டத்தில் மேற்கொண்ட திட்டங்கள் மூலம் சிறுபான்மை மக்கள் மத்தியிலும் 22 சதவீத ஆதரவு அவருக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் 5 நாட்கள் மத்திய பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் தொடர் ஆய்வில் ஈடுபடவுள்ளனர். ஆய்வு அறிக்கையை கட்சி தலைமையிடம் இவர்கள் வழங்கவுள்ளனர். கட்சியின் உள்ளூர் தலைவர்களுக்கே தெரியாமல் இந்த கருத்து கணிப்பு நடந்து வருகிறது.
| சட்டப்பேரவை வேட்பாளர் பட்டியல் தயார் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் பட்டியலையும், பாஜக தகவல் தொழில்நுட்பக்குழு தயார் செய்துள்ளது. அதிமுக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தால் நாகர்கோவில், குளச்சல், கிள்ளியூர் தொகுதியில் பாஜக போட்டியிடுவதெனவும், கடந்த தேர்தலை போன்றே தனித்து போட்டியிட்டால் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களை களம் இறக்குவது எனவும், அதற்காக தொகுதிக்கு 3 பேர் அடங்கிய தனித்தனி வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்துள்ளனர். |