Last Updated : 11 Sep, 2020 12:25 PM

 

Published : 11 Sep 2020 12:25 PM
Last Updated : 11 Sep 2020 12:25 PM

போதிய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் சாலையில் நெல்லுடன் காத்திருக்கும் விவசாயிகள்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் போதிய நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத காரணத்தால், தற்போது செயல்படும் கொள்முதல் நிலையங்கள் அருகே சாலையில் நெல்லை குவித்து வைத்துக் கொண்டு நாள் கணக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 44 ஆயிரம் ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மேட்டூரிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப் பட்டதாலும், பம்பு செட் மூலம் சாகுபடி பணிகளை முன்கூட்டியே விவசாயிகள் தொடங்கியதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் சாகுபடி பரப்பளவு 54 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது பம்புசெட் மூலமாக முன்கூட்டியே சாகுபடி செய்த விவசாயிகள், நெல் அறுவடையை தொடங்கி உள்ளனர். ஆனால், போதிய அளவில் கொள்முதல் நிலையங்களை திறக்காததால், தற்போது செயல்படும் கொள்முதல் நிலையங்களுக்கு அறுவடை செய்த நெல்லை கொண்டுவந்து விற்பனைக்காக சாலையில் கொட்டி வைத்துக் கொண்டு நாள் கணக்கில் காத்திருக்கின்றனர். மேலும், மழை பெய்வதால், சாலையில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் நெல் மணிகள் நனைந்து, முளைவிடுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஆழிவாய்க்கால் விவசாயி சவுந்தரராஜன் கூறியது:

எங்கள் பகுதியில் பம்புசெட் மூலம் சாகுபடி செய்த நெல், தற்போது அறுவடை செய்யப்பட்டுள்ளது. ஆழிவாய்க் காலில் கொள்முதல் நிலையம் திறக்காததால், மடிகை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்துள் ளோம். இதேபோல துறையூர், காட்டுக்குறிச்சி, கா.புதூர், மடிகை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இங்குதான் நெல்லை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.

ஆனால், இங்கு ஒருநாளைக்கு 600 முதல் 800 மூட்டை வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், நெல்மணிகளை சாலை யோரம் குவித்து வைத்துக்கொண்டு இரவு- பகலாக காவல் காத்து வருகிறோம். மழை அவ்வப்போது பெய்வதால், நெல்மணிகளின் ஈரப்பதம் அதிகரித்து காணப் படுகிறது. ஈரப்பதத்தின் அளவு குறைய வெயிலில் உலர்த்தி அதன்பிறகே விற்பனை செய்ய வேண்டி உள்ளது. இதனாலும், காத்திருக்க வேண்டி உள்ளது.

மேலும், மழையில் நனையும் நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியுள்ளன. இதனால் நெல்லின் தரமும் குறையும்.

எங்களது பகுதிகளிலேயே கொள்முதல் நிலையங்களை திறந்துவிட்டால், இங்கு வந்து காத்திருக்க வேண்டியதில்லை. வெகு சிரமப்பட்டு சாகுபடி செய்த நெல்லை இப்படி கொண்டு வந்து விற்பனைக்காக நான்கைந்து நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது என்றார்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் கதிரேசன் கூறிய தாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 123 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை 7.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், வெளி மாவட்டங்களுக்கு 5.40 லட்சம் டன் நெல் அனுப்பப்பட்டுள்ளது.

அறுவடை அதிகமாக இருக்கும் பகுதியில் தேவையான இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. மேலும், போதியளவு சாக்கும் கையிருப்பு உள்ளது. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் சாலையோரம் நெல்லை உலர்த்த வேண்டாம், கொள்முதல் நிலைய களத்தி லேயே உலர்த்துமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.

இதை பின்பற்றி கொள்முத லுக்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x