

ஏற்காட்டில் உள்ள கொடிக்காடு மலைக்கிராமத்தில் சாலை வசதியில்லாததால் அவசர சிகிச்சை தேவைப்படுவோரை தூளி கட்டி தூக்கி வரும் நிலையுள்ளது. இந்நிலை மாற சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்காடு மலைப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இதில் ஒன்று கிளியூர் நீர்வீழ்ச்சியை அடுத்த கொடிக்காடு கிராமம். இங்கு சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் பல ஆண்டுகளாக மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இக்கிராமத்தில் இருந்து பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், கூலி வேலைக்கு செல்வோர் கிளியூர் நீர்வீழ்ச்சியை கடந்து ஒற்றையடி பாதை வழியாக, கரடு முரடான பாறைகளை கடந்து நடந்தே ஏற்காட்டுக்கு செல்ல வேண்டும்.
இதனால், முதியவர்கள் ஊரை விட்டு வெளியே செல்ல முடியாமல் கொடிக்காடு கிராமத்துக்குள் முடங்கிக் கிடக்கும் சோகம் நிலவி வருகிறது. மேலும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுவோர்களை தூளிகட்டி மலைப்பகுதி வழியாக தூக்கிக் கொண்டு ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு வரும் அவலம் உள்ளது.
தங்கள் கிராமத்துக்கு சாலை வசதி அமைத்து தரக்கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், தேர்தல் நேரங்களில் இங்கு வரும் அரசியல் கட்சியினரிடம் இக்கோரிக்கையை முன் வைத்தபோதும் இதுவரை நிறைவேறவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் மரத்தில் இருந்து கீழே விழுந்த ஒருவரை கிராம மக்கள் தூளி கட்டி சிகிச்சைக்கு தூக்கிச் சென்ற வீடியோ பதிவு வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தங்களின் சிரமத்தை போக்க சாலை வசதி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொடிக்காடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.