

ஓசூர் மாநகராட்சி சார்பில் தளி சாலை சந்திப்பில் தனியார் நிறுவன ஒத்துழைப்புடன் 12 ஆயிரம் சதுர அடியில் 3 ஆயிரம் மரங்களை உள்ளடக்கிய அடர்த்தியான குறுங்காடு உருவாக்கப்பட்டுள்ளது.
ஓசூர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் தூய்மையான காற்றுடன் சுற்றுச்சூழலைப் பேணிக்காக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் பயோட்டாசாயில் பவுண்டேசன் மூலமாக மியாவாக்கி முறையில் அடர்த்தியான குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு ஓசூர் அரசுக் கல்லூரி வளாகத்தில் சுமார் 700 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு முதல் குறுங்காடு உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசு கல்லூரியிலேயே இரண்டாவது குறுங்காடும் அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி சார்பில் தனியார் நிறுவன ஒத்துழைப்புடன் ஓசூர் - தளி சாலை சந்திப்பில் குறுங்காடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குறுங்காட்டில் அரிய வகை மரங்களான கடம்பு, குமிழ், வாகை, வெற்றிமரம், வேம்பு, மூங்கில், மலைவேம்பு உள்ளிட்ட 65 மரவகைகளைக் கொண்ட 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
இயற்கை உரம் மூலமாக நடவு செய்யப்பட்ட இந்த மரக்கன்றுகள் அனைத்தும் 8 மாதங்களிலேயே வழக்கத்துக்கு மாறாக அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளன. இதில் பெரும்பாலான மரங்கள் 20 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து குறுங்காடு அமைத்தல் பணியில் ஈடுபட்டு வரும் பயோட்டாசாயில் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர்கள் செந்தில் மற்றும் அரவிந்த் கூறும்போது, ''ஓசூர் - தளி சாலை சந்திப்பில் சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பசுமையான அடர்ந்த குறுங்காடு அமைக்கப்பட்டுள்ளது. குறுங்காடுகள் அமைத்தல் மூலமாக இப்பகுதியில் தூய்மையான காற்று, அதிகமான ஆக்சிஜன் உற்பத்தி, நிலத்தடி நீர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. நிலத்தடி நீர் சேமிப்புக்காக குறுங்காட்டை நோக்கி மழைநீர் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்றனர்.
இதுகுறித்து ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் கூறும்போது, ''தனியார் நிறுவன ஒத்துழைப்புடன் ஓசூர் - தளி சாலை சந்திப்பில் குறுங்காடு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உட்பட நகரப்பகுதியில் 10 இடங்களில் தனியார் நிறுவன ஒத்துழைப்புடன் குறுங்காடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன'' என்றார்.