தமிழக கிராமங்களில் கேரள கழிவுகள்

தமிழக கிராமங்களில் கேரள கழிவுகள்
Updated on
1 min read

எஸ்.கோபு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கோபாலபுரம், மீனாட்சிபுரம் பகுதிகள் கேரள மாநில நுழைவுவாயிலாக உள்ளன. தினமும் கேரள மாநில மக்களுக்கு தேவையான அரிசி, காய்கறி, பால், இறைச்சிக் காக மாடுகள், கோழிகள், தென்மாவட்டங் களிலிருந்து மீன்கள், ஆடை, சிமென்ட் என அனைத்து வகையான பொருட்களையும் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், இருமாநில எல்லையில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளைக் கடந்தே சென்று, வருகின்றன.

இந்நிலையில், கேரளாவிலிருந்து காய்கறிக் கழிவு, கோழி, மாட்டிறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள், மீன் கழிவு ஆகியவற்றைக் கொண்டுவந்து, தமிழக எல்லையோரக் கிராமங்கள் மற்றும் சாலை யோரங்களில் கொட்டிச் செல்வதால், பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கேரள மாநிலத்தில் இயற்கை வளத்தைப் பாதுகாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும், இறைச்சிக் கழிவுகள், ஹோட்டல் உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் போன்றவற்றை பொதுஇடங்களில் கொட்ட அனுமதிப்பதில்லை. கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம், திருச்சூர், கொல்லம், கோட்டயம், கண்ணூர், பத்தனம்திட்டா மாவட்டங்களில் உணவுக்காகப் பயன் படுத்தப்படும் கறிக் கோழிகளின் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளான சிரிஞ்ச், மாத்திரை, ரத்தக்கறை படிந்த உடைகள், பஞ்சுகள், அறுவைசிகிச்சை மூலம் அகற்றப் படும் மனித உடல் பாகங்கள் என ஆபத்தை விளைவிக்கும் கழிவுகளை இரவு நேரங்களில் லாரிகள், மினி ஆட்டோக்களில் டன் கணக்கில் கொண்டுவந்து, கேரள எல்லையில் உள்ள வேலந்தாவளம், நவக்கரை, கா.க.சாவடி, மதுக்கரை, எட்டிமடை, கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், கோபாலபுரம், திவான்சாபுதூர் பகுதிகளில் கொட்டுவதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது.

தமிழகத்தில் மருத்துவக் கழிவுகளைக் கையாளுவதில் மருத்துவ மனைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், கேரள மருத்துவமனைகளிலிருந்து அகற்றப்படும் ஆபத்தான மருத்துவக் கழிவுகளை, தமிழக எல்லைக்குள் எளிதாகக் கொட்டிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. எனவே, தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண் காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். கேரளா விலிருந்து கழிவுகளைக் கொண்டுவரும் லாரி ஓட்டுநர்கள் மீது தொற்று நோய் பரவல் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in