Published : 11 Sep 2020 11:42 AM
Last Updated : 11 Sep 2020 11:42 AM

இளைஞர்களுக்கு கைகொடுக்கும் ‘வேலைவாய்ப்பு வெள்ளி’

த.சத்தியசீலன் 

தமிழகத்தில் படித்த, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வெள்ளிக்கிழமைகளில் ‘வேலைவாய்ப்பு வெள்ளி' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்' என்ற இணையதளத்தை கடந்த ஜூன் மாதம் முதல்வர் கே.பழனிசாமி தொடங்கிவைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை கோவை மண்டல இணை இயக்குநர் ஆ.லதா கூறியதாவது:

தனியார் துறையில் வேலைவாய்ப்பு தேவைப்படுவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து வருகின்றனர். இதேபோல, வேலை அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளும் இதில் பதிவு செய்கின்றன. இது முற்றிலும் இலவச சேவையாகும்.

கடந்த இரு மாதங்களில் 635 பேர் இதன்மூலமாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கோவை மண்டலத்தில் மட்டும் 340 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கல்வித் தகுதி, நிறுவனங்களின் தேவைக்கேற்ப தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. இணையதளம் வழியாகவே நேர்காணல் நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பு ஆணைகள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையத்தில் பதிவுசெய்துள்ள தனியார் நிறுவனங்களில் தற்போது 20 ஆயிரம் வேலைவாய்ப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களில் தகுதியுள்ள இளைஞர்களைப் பணியமர்த்த தேவையான நடவடிக்கைகளை வேலைவாய்ப்புத் துறை மேற்கொண்டு வருகிறது. அரசின் இணையதளம் மூலமாக, இளைஞர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள நிறுவனங்களைக் கண்டறிந்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

இதேபோல, வேலை அளிப்போர் விண்ணப்பங்களை பொறுமையாக பரிசீலனை செய்து, தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய இயலும். நேரடி வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாக ஏற்படும் கூட்ட நெரிசல், காலவிரயம் போன்றவையும் இந்த திட்டத்தால் தவிர்க்கப்பட்டுள்ளது.

தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. அவர்கள் தொடர்ந்து பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம். வேலைவாய்ப்பு பெற்று, அதன்மூலம் கிடைக்கும் பணி அனுபவச் சான்றிதழையும்கூட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x