கோவை - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலால் திணறும் வெள்ளகோவில் நகரம்

வெள்ளகோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.
வெள்ளகோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்.
Updated on
2 min read

திருப்பூர் மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் வெள்ள கோவிலும் ஒன்று. 321 கி.மீ. தூரம் கொண்ட கோவை - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூ ரின் ஒரு பக்க எல்லையில் அமைந்துள்ளது வெள்ளகோவில் நகரம். திருச்சி, கரூர் வழியாக திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் கேரளா செல்லும் வாகனங்களுக்கு தவிர்க்க இயலாத பகுதியாகவும் விளங்குகிறது. இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில நாட்களாக போக்குவரத்து பிரச்சினை இல்லாமல் இருந்த இப்பகுதி, இ-பாஸ் ரத்து, பேருந்து போக்குவரத்து அனுமதி உள்ளிட்ட தளர்வுகளால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி வருகிறது.

உதாரணமாக, கோவையிலிருந்து திருச்சிக்கு எவ்வளவு அதி விரைவாக வாகனம் சென்றாலும், வெள்ளகோவில் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கடந்து செல்ல சுமார் அரை மணி நேரம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. காலை, மாலை நேரங்களில் கோவை மார்க்கமாகவும், திருச்சி மார்க்கமாகவும் செல்லும்சாலைகளில் பல கி.மீ. தூரத்துக்கு சரக்கு லாரிகள், பேருந்துகள், கார் உட்பட அனைத்து ரக வாகனங்களும் அணிவகுத்துநிற்கின்றன. இது, தேசிய நெடுஞ் சாலையில் பயணிப்போருடன், உள்ளூர் பொதுமக்களையும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. பிரச்சினைக்கு தீர்வு காண நகராட்சி நிர்வாகம், காவல் துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளகோவில் நகர மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அப்ப குதியை சேர்ந்த சமூக ஆர்வலர் எஸ்.மணிகண்டன் ‘இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, “கடந்த சில நாட்களாகவே போக்குவரத்து நெரிசல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் விரிவாக்க மற்றும் கட்டுமான பணிகளே முக்கிய காரணம். திருப்பூரிலிருந்து வெள்ளகோவில் வரும்போது, நகரம் தொடங்கும் இடத்தில் தரைப்பாலம் கட்டப்படுகிறது. கடைவீதியில் 2 இடங்கள், கடை வீதி தாண்டி திருச்சி மார்க்கமாக செல்லும்போது ஓர் இடத்திலும் தரைப்பாலங்கள் கட்டப்படுகின்றன. மேலும், நகரம் தொடங்கி நிறைவு பெறும் சில கி.மீ. தூரத்துக்கு சாலையை தேசிய நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கம் செய்து வருகிறது. கடந்த ஒரு மாதங்களாகியும் மந்தமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

மத்திய மண்டல மாவட்டங்களில் இருந்து கொங்கு மண்டல மாவட்டங்கள் மற்றும் கேரளாவுக்கு சிமென்ட், கம்பிகள், மரங்கள், அடுப்புக்கான கரி, மணல், எம்-சாண்ட், ஜல்லி கற்கள், செங்கல், கட்டுமான கற்கள், காற்றாலை கனரக இயந்திரங்கள் அதிகளவில் கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றோடு கார்கள், பேருந்துகள்உள்ளிட்டவையும் சேர்ந்துவிடு கின்றன. எனவே, சாலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகள் முடியும் வரை தற்காலிகமாக குறிப்பிட்ட சில வாகனங்கள் செல்ல மாற்றுப்பாதை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்” என்றார்.

மாற்றுப்பாதை ஆலோசனை

காங்கயம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மகேஷ்வரனிடம் கேட்டபோது, “இப்பிரச்சினைக்கு தீர்வு காண மாற்றுப் பாதை திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம். சில தினங்களில் மாற்றுப்பாதை ஏற்படுத்தி தரப்படும்” என்றார்.

வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் சசிகலா கூறும்போது, “கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், இபிரச்சினை ஏற்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உரிய அழுத்தம் கொடுக்கப்படும்'’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in