

திருவண்ணாமலைக்கு வருகை தந்த முதல்வர் பழனிசாமியை, அரியர் பாஸ் பண்ண வைத்த தெய்வமே வாழ்க என முழக்கமிட்டு கல்லூரி மாணவர்கள் வரவேற்பு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணி மற்றும் வளர்ச்சிப் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து முதல்வர் பழனிசாமி, அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.
முன்னதாக, ஆய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து கீழ்பென்னாத்தூர் வழியாக திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு வழி நெடுகிலும் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர்.
இதில், அனைவரது கவனத்தை யும் ஈர்க்கும் வகையில், கல்லூரி மாணவர்களின் வரவேற்பு அமைந்தது. அவர்கள் ஒன்றாக சேர்ந்து, “அரியர் பாஸ் பண்ண வைத்த தெய்வமே வாழ்க” என்ற முழக்கமிட்ட சம்பவம் அனைவரையும் ஒரு நொடி திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதில், முதல்வர் பழனிசாமியும் தப்பவில்லை.
அப்போது, மாணவர்களின் திசையை நோக்கி முக மகிழ்ச்சியுடன் கை அசைத்தவாறு காரில் பயணித்தார். கரோனா புண்ணியத்தால், பல ஆண்டு களாக கிடப்பில் இருந்த அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மாவட்டந்தோறும் சுற்றுப் பயணம் செல்லும் முதல் வரை வரவேற்க மறப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.