

கரூர் வையாபுரி நகரைச் சேர்ந்தவர் கோபிநாத்(31), வெல்டர். இவரது தாய் சுகுணா(53) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கரூர் லாரிமேட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.15 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். 4 மாதங்கள் மட்டுமே சுகுணா வட்டியைச் செலுத்திய நிலையில், அதன்பின் கோபிநாத் கடனுக்கு பொறுப்பேற்றுக்கொண்டு கடந்த 2 ஆண்டுகளாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வட்டி செலுத்தி வந்துள்ளார்.
கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக கோபிநாத் கடனுக்கு வட்டி செலுத்தவில்லை. இந்நிலையில், கடந்த ஆக.31-ம் தேதி நிதி நிறுவன மேலாளர் செந்தில்குமார்(39) மற்றும் ஊழியர் பிரகாஷ் ஆகியோர் கோபிநாத் வீட்டுக்குச் சென்று அசல் மற்றும் வட்டித்தொகையை திரும்ப செலுத்தக்கூறி அவரை ஆபாசமாக திட்டி, மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, செப்.1-ம் தேதி ஆட்சியர் அலுவலகம் சென்ற கோபிநாத், மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தாந்தோணிமலை போலீஸார் கோபிநாத்தை மீட்டதோடு அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், கரூர் நகர காவல் நிலையத்தில் கோபிநாத் நேற்று முன்தினம் அளித்த புகாரின்பேரில்தனியார் நிதி நிறுவன உரிமையாளரும், கரூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவருமான எம்.கே.கணேசமூர்த்தி, நிதி நிறுவன மேலாளர் செந்தில்குமார், ஊழியர் பிரகாஷ் ஆகிய 3 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். செந்தில்குமாரை கைது செய்துள்ள போலீஸார், தலைமறைவான மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.