

நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் என அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, மாணவர்கள் இத்தகைய விபரீத முடிவை எடுக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் விக்னேஷ்(19). 2017-18-ல் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1,006 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்ற இவர், ஏற்கெனவே 2 முறை நீட் தேர்வை எழுதி, குறைந்த மதிப்பெண்களையே பெற்றவர்.
நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில், வீட்டிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. செந்துறை போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, விக்னேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், “ஏற்கெனவே 2 முறை நீட் தேர்வெழுதி குறைந்த மதிப்பெண் பெற்றதால், தற்பொழுது எழுதவுள்ள தேர்விலும் மதிப்பெண் குறைவாக பெற்றுவிடுவோமா என்ற அச்சத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்” என விக்னேஷின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், நீட் தேர்வு மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக செந்துறை போலீஸார், நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரசு தலைமைக் கொறடா
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு நேற்று வீட்டுக்கு எடுத்துவரப்பட்ட விக்னேஷின் உடலுக்கு அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஜெகேஎன்.ராமஜெயலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, சொந்த நிதியிலிருந்து இருவரும் தலா ரூ.50 ஆயிரத்தை விக்னேஷின் குடும்பத்துக்கு வழங்கி ஆறுதல் கூறினர்.
முன்னதாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் மாணவரின் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். திமுக சார்பில் செந்துறையில் நேற்று மவுன ஊர்வலம் நடைபெற்றது.
விக்னேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். அப்போது, நேற்று முன்தினம் இறந்த நிலையில் இதுவரை திமுக சார்பில் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை எனக்கூறி அவரை அஞ்சலி செலுத்த விடாமல் பாமகவினர் தடுத்து நிறுத்தியதுடன், விக்னேஷின் உடலை மயானத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு உடல் தகனம் செய்யப்பட்டது. இதனிடையே, விக்னேஷின் தந்தை விஸ்வநாதனை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், திமுக சார்பில் ரூ.5 லட்சம் வழங்கி ஆறுதல் கூறினார்.
முதல்வர் நிவாரணம்
இந்நிலையில், முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் விக்னேஷின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, அவரது குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசு அல்லது அரசு சார்ந்த பணி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவர்கள் எதையும் எதிர்கொள்ளும் மன உறுதி, விடாமுயற்சியை வளர்த்துக்கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
பாமக ரூ.10 லட்சம்
விக்னேஷ் குடும்பத்துக்கு பாமக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங் கப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தும்அதே நேரத்தில் மாணவர்கள் எவரும் தற்கொலை போன்ற முடிவை எடுத்துவிடக் கூடாது என கட்சியின்தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.