Published : 11 Sep 2020 07:50 AM
Last Updated : 11 Sep 2020 07:50 AM

சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு வந்து செல்ல மின்சார ரயில் இயங்காததால் புறநகர் பகுதி மக்கள் அவதி

கரோனா ஊரடங்கால் சென்னையில் புறநகர் மின்சார ரயில்களின்சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால், புறநகர் பகுதிகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களில் சுமார் 8 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர். சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் ஐடி, வாகனஉற்பத்தி மற்றும் இதர தொழிற்சாலைகள் அதிகரித்துள்ள நிலையில், மின்சார ரயில்களில் பயணம்முக்கியமானதாக இருந்து வருகிறது.

பணிக்கு செல்வோர் அதிகரிப்பு

இதற்கிடையே, கரோனா ஊரடங்கால் 5 மாதங்களுக்கும் மேலாக மின்சார ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், லட்சக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்து வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை அனுமதிப்பதுபோல், மின்சார ரயில்களின் சேவையும் தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தனியார் நிறுவன ஊழியர்கள் சிலர் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கில் தற்போது தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலானோர் பணிக்குச் சென்று வருகின்றனர்.

பயணிகள் ஏமாற்றம்

இதற்கிடையே, மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளன. இது, மாநகரத்தில் உள்ளே சென்று வர, வசதியாக இருக்கிறது.

இருப்பினும், மேல்மருவத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, திருவள்ளூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து வந்து செல்ல வசதியாக இருக்கும் மின்சார ரயில்கள் இயக்க அனுமதிக்காதது, பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் வாகனங்களில் செல்வதால், போக்குவரத்து செலவு 2முதல் 3 மடங்கு வரை அதிகரித்துவிட்டது. எனவே, முதல்கட்டமாக குறைந்தபட்ச மின்சார ரயில்களையாவது இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x