

முரசொலி அறக்கட்டளை பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்ததால் தனக்கு எதிராக திமுக தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க ஆர்.எஸ்.பாரதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள முரசொலி அறக்கட்டளை அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளதால், அதற்கான மூல பத்திரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து திமுக மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக கூறி, ராமதாஸுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான ஆர்.எஸ்.பாரதி, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் கடந்த மார்ச் 20-ம் தேதி ராமதாஸ் நேரில் ஆஜராக சம்மன் பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், ராமதாஸ் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி தரப்பில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதி, விசாரணையை அக்.5-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.