

சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குடும்பங்களின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக் கூடத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் திறந்து வைத்தார்.
சென்னை புதுப்பேட்டை மற்றும் புனித தோமையர் மலை ஆகிய இடங்களில் சென்னை பெருநகர காவலின் ஆயுதப்படை செயல்பட்டு வருகிறது. மேலும், இங்கு ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்கள்வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் காவலர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு,சிறிய குடும்ப நிகழ்ச்சிகளான பிறந்தநாள், நிச்சயதார்த்தம், சீமந்தம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு சென்னை பெருநகர காவல் ஆணையரின் பரிந்துரையின்பேரில், புனித தோமையர் மலை மற்றும் புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில், புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக் கூடத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கடந்த மாதம் 11-ம் தேதி திறந்து வைத்தார்.
குடியிருப்பில் ஆய்வு
மேலும், புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், ராஜரத்தினம் மைதானம் பின்புறம் புதிதாக கட்டப்பட்ட புதிய சமுதாய நலக்கூடத்தை காவல் ஆணையர் தற்போது திறந்து வைத்துள்ளார். பின்னர், ஆயுதப்படை காவலர் குடியிருப்புக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், தலைமையிட காவல் கூடுதல் ஆணையர் ஏ.அமல்ராஜ், இணை ஆணையர்கள் ஆர்.சுதாகர், எஸ்.மல்லிகா, துணை ஆணையர்கள் பெரோஸ்கான் அப்துல்லா, டி.கே.ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.