

கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கூடுதலாக 400 படுக்கை வசதி கொண்ட தனி வார்டை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபாதை மேம்பாலப் பணிகளுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர்,கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும்வகையில் மேலும், கூடுதலாக 400 படுக்கைகள் கொண்ட வார்டை தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே, 800 படுக்கை வசதியுடன் சிகிச்சை அளித்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக 400 படுக்கை வசதிகொண்ட வார்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் முகக்கவசங்கள் அணியாமல்வெளியே செல்ல வேண்டாம்.சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.
கரோனா சிகிச்சைக்கு சிலரே தனியார் மருத்துவ மனைகளை நாடிச் செல்கின்றனர் என்றாலும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கரோனா வார்டுகளில் படுக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை பெறும் வகையில்தொடங்கப்பட்ட இ-சஞ்சீவினி செயலி மூலம் இதுவரை 1 லட்சம் பேர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றுள்ளனர்.
சிவப்பு மண்டலங்களாக உருவாக வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்ட நாகை, கடலூர், கோவை,சேலம், திருவண்ணாமலை ஆகிய5 மாவட்டங்களில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்னும் ஓரிரு நாட்களில் அந்த மாவட்டங்களில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்படும். கரோனா கோவிஷீல்ட் தடுப்பு மருந்து பரிசோதனை நிலையில்தான் உள்ளது. ஐ.சி.எம்.ஆர். அளித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து பரிசோதனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வின்போது, சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.