

கூவாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவைக் காண விழுப்புரத்தில் திருநங்கைகள் குவிந்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் கூத்தாண்டவர் திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றம் மற்றும் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாளை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இரவு சுவாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்துகொள்ள மும்பை, கொல்கத்தா, டெல்லி, உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு வருவார்கள்.
கோயில் வாசலில் அனைத்து திருநங்கைகளும் தங்களை புதுமணப் பெண்கள் போல் ஆடை அணிகலன்களால் அலங்கரித்துக் கொள்வார்கள். பின்னர் கோயில் பூசாரிகளின் கையால் தாலி கட்டிக்கொள்ளும் திருநங்கைகள் இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வார்கள்.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகளும், வேண்டுதலின் பேரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் தாலி கட்டிக் கொள்வார்கள். புதன்கிழமை அதிகாலை ஊர்வலமாக அரவாண் சிரசு எடுத்து வரும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து தேரோட்டமும் நடக்கிறது.
பல்வேறு இடங்களில் இருந்து வரும் திருநங்கைகள் விழுப்புரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியிருந்து இங்கு நடைபெறும் ‘மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி, நடன போட்டி, பாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்பது வழக்கம்.
கடந்த ஆண்டு தங்கும் விடுதிகளில் ரூ.1,500 ஆக இருந்த ஒரு நாள் வாடகை இந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.2,300 வரை உயர்த்தப்பட்டுள்ளது.