Published : 10 Sep 2020 09:07 PM
Last Updated : 10 Sep 2020 09:07 PM

மறைந்த மனைவிக்கு தத்ரூபமாக சிலை வடித்த தொழிலதிபர்: கர்நாடகாவைப் போல் மதுரையிலும் ஒரு நவீன கால ஷாஜகான்

கர்நாடகா தொழில் அதிபரைப் போல், மதுரையிலும் இறந்த மனைவிக்கு தத்ரூபமாக சிலை வடித்து தனது மனைவி மீதான ஆழமான காதலை தொழில் அதிபர் ஒருவர் வெளிப்படுத்தியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கர்நாடகா மாநிலம் கொப்பால் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீநிவாஸ் குப்தா என்பவர், மனைவிக்காக வடிவமைத்த சிலிக்கான் சிலை, சமூக வலைதளங்கில் வைரலானது. இணையவாசிகள், அவரை நவீன கால ஷாஜஹான் என்ற அளவுக்குக் கொண்டாடினர்.

தற்போது அதுபோல் மதுரையிலும் மேல பொன்னநகரத்தை சேர்ந்த தொழில் அதிபர் சி.சேதுராமன்(74) என்பவர், தனது மனைவி இறந்த 30 நாளில் அவருக்காக வீட்டிலே தத்ரூபமாக சிலை ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இவரது மனைவி பிச்சைமணி(68) அம்மாள் கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். கணவன், மனைவியாக இருவரும் 48 ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.

ஆரம்ப காலத்தில் சேதுராமன், அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்துள்ளார். மிகக் கஷ்டமான அந்த வாழ்க்கைச் சூழலில் அவரது மனைவி கொடுத்த ஊக்கத்தாலேயே சேதுராமன், அரசு வேலையைவிட்டுவிட்டு, சொந்தமாக மதுரையில் ரத்த வங்கி தொடங்கினார். அதன்பிறகு மதுரையின் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவராக சேதுராமன் உயர்ந்தார்.

தன்னுடைய கஷ்டகாலத்திலும், சந்தோஷமான நாட்களிலும் 48 ஆண்டுகள் உடனிருந்த மனைவியின் மறைவை சேதுராமனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதனால், அவரது நினைவைப்போற்றும் வகையில் சேதுராமன், மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பியான பிரசன்னா மற்றும் ஓவியர் மதுரை மருது ஆகியோரை கொண்டு தனது வீட்டிலே பைபர் மெட்ரியல் மூலம் 6 அடி உயரம் கொண்ட தனது மனைவியை தத்ரூபமாக சிலையாக வடிவமைத்தார்.

தற்போது சிறு சிறு, சண்டை சச்சரவுகளுக்கு கூட கணவன், மனைவி பிரிவுகள் நடக்கும்நிலையில் 48 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்த தன்னோட மனைவி மீதான தன்னுடைய ஆழமான காதலையும், நேசத்தையும் வெளிப்படுத்துவதற்காகவும், இன்றைய இளையசமூகத்தினர் கணவன் - மனைவியின் புனிதமான உறவை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இந்த சிலையை வடிவமைத்ததாக சேதுராமன் தெரிவித்தார். இந்த சிலையை பார்க்கும்போதெல்லாம் தனது மனைவி தன்னுடனே இருப்பது போல் உணருவதாக நெகிழ தெரிவிக்கிறார் சேதுராமன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x