

கோவை அரசு மருத்துவமனையில் 15 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கி கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கப்பட்டது. இங்கு கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களிடமிருந்து அதிகபட்சம் 400 மில்லி லிட்டர் பிளாஸ்மா பெறப்பட்டு, நோயின் தன்மை மிதமாக உள்ள கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மாவைச் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு நேற்று (செப். 9) வரை கரோனாவிலிருந்து மீண்ட 15 தன்னார்வக் கொடையாளர்கள் பிளாஸ்மா தானம் செய்துள்ளனர். இவர்களிடமிருந்து பெறப்பட்ட பிளாஸ்மாவை, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 16 பேருக்கு ஒரு வாரத்துக்குள் செலுத்தியதில் அவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனையின் டீன் பி.காளிதாஸ் கூறும்போது, "ஏற்கெனவே கரோனாவில் இருந்து மீண்டவர்களின் ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் திரவ வடிவிலான பிளாஸ்மாவில் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும்.
ஒருவரிடமிருந்து பெறப்படும் பிளாஸ்மா மூலம் 2 பேருக்குச் சிகிச்சை அளிக்க முடியும். 24 மணி நேர இடைவெளியில் இரண்டு நாட்களுக்கு, தலா 200 மில்லி லிட்டர் வீதம் ஒருவருக்கு பிளாஸ்மா செலுத்தப்படுகிறது.
செலுத்தப்படும் பிளாஸ்மாவானது நோயாளிகளின் உடலில் இருக்கும் கரோனா வைரஸின் செயல்பாட்டை நடுநிலையாக்கி, வைரஸ் எண்ணிக்கையைக் குறைத்து, நோயாளிகளின் செயற்கை ஆக்சிஜன் தேவையைக் குறைக்க உதவுகிறது. இவ்வாறு பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்காக, மருத்துவமனையின் ரத்த வங்கி துறைத் தலைவரும், மாவட்ட குருதி பரிமாற்று அலுவலருமான ஏ.மங்கையற்கரசி தலைமையில் 2 மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீஷியன்கள் என 7 பேர் பணியாற்றி வருகின்றனர்.
யாரெல்லாம் தானம் அளிக்கலாம்?
பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18 வயது முதல் 65 வயது வரை இருக்க வேண்டும். தொற்றால் குணமடைந்தவர்கள் 'நெகட்டிவ்' என முடிவு பெறப்பட்ட நாளில் இருந்து 14-வது நாளில் பிளாஸ்மா தானம் செய்யலாம். பிளாஸ்மா தானம் செய்ய முன்வருபவர்களுக்கு உரிய பரிசோதனை மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அளவிடப்பட்டு தகுதியான கொடையாளர்களிடமிருந்து அதிகபட்சமாக 400 மில்லி லிட்டர் பிளாஸ்மா எடுக்கப்படுகிறது. இதற்கு 30 நிமிடம் மட்டுமே ஆகும்.
பிளாஸ்மா தானம் செய்வதால் ஒருவரின் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையாது. அளிக்கப்படும் பிளாஸ்மா 24 மணி நேரத்துக்குள் உடம்பில் திரும்ப ஊறிவிடும். எனவே, கரோனாவில் இருந்து மீண்டவர்கள் தானம் அளிக்க முன்வர வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க இயலாது.
ஓராண்டு பாதுகாக்கலாம்
ஒருமுறை பிளாஸ்மா தானம் செய்தவர், 14 நாட்கள் இடைவெளி விட்டு இரண்டாவது முறை பிளாஸ்மா தானம் செய்யலாம். ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட பிளாஸ்மாவானது, மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிர்நிலையில், ஆய்வகத்தில் ஓராண்டு வரை பாதுகாத்து தேவைப்படும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க இயலும்" என்றார்.