

நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடங்கியுள்ளது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் மலை ரயிலை இயக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், கடந்த ஆறு மாதங்களாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருந்தன. மேலும், பொதுப் போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், தற்போது பல தளர்வுகளுடன் இம்மாதம் 30-ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய தளர்வுகளில் சுற்றுலாத் துறையைக் கருத்தில் கொண்டு பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.
இ-பாஸ் பெற்று சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் 224 பெரியவர்கள், 13 சிறியவர்கள் என மொத்தம் 237 சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தில் உள்ள பூங்காக்களுக்கு வந்திருந்தனர்.
அதில் அதிகபட்சமாக உதகை அரசு தாவரவியல் பூங்காவுக்கு 115 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஒரு மணி நேரத்தில் பூங்காவைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்ப அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த எண்ணிக்கை இன்று (செப். 10) அதிகரித்தது. வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் தெரிவித்தார்.
சுற்றுலா நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதால் பூங்காக்கள் அருகில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தங்கள் கடைகளைத் திறக்கத் தொடங்கியுள்ளனர்.
வியாபாரிகள் கூறும் போது, "சுற்றுலாத் தலங்கள்அருகே சிறு வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் பிழைப்பு நடத்தி வருகிறோம். கடந்த 6 மாதங்களாக வருவாய் இல்லாமல் தவித்து வருகிறோம். தற்போது பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளதால், வியாபாரம் இல்லை என்றாலும், வரும் நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வியாபாரம் அதிகரிக்கும் என நம்புகிறோம்.
ஆனால், நீலகிரி மாவட்டம் சகஜ நிலைக்குத் திரும்ப அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட வேண்டும். சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டால்தான் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாவுக்காக நீலகிரி மாவட்டம் வருவார்கள். இதனால் எங்களுக்கு மட்டுமல்லாமல் அரசுக்கும் வருவாய் கிடைக்கும்" என்றனர்.
மலை ரயில் இயக்கப்படுமா?
இந்நிலையில், உள்நாடு மட்டுமல்லாமல் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்த மலை ரயில் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா ஆர்வலர்களிடம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வரும் மலை ரயில் இயக்கப்படாதது, சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா ஆர்வலர் டி.வேணுகோபால் கூறும் போது, "பொது முடக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். நீலகிரி மாவட்டம் சுற்றுலாவை மட்டுமே நம்பியுள்ளது.
தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் அரசு பூங்காக்களின் வருவாய் மட்டும் ஆண்டுக்கு ரூ.8-10 கோடி. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். சுற்றுலாவைச் சார்ந்துள்ள அரசு தனியார், வியாபாரிகள், உணவகங்கள் என ஆண்டுக்கு மாவட்டத்தின் வருவாய் சுமார் 100 கோடி எட்டும்.
இந்த ஆண்டு இந்த வருவாய் முடங்கியது. இதனால் மாவட்டம் பொருளாதார ரீதியாக கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
இங்கு வியாபாரிகள், வாடகை வாகனங்கள் ஓட்டுபவர்கள், ஆட்டோ, டாக்ஸி என அனைத்துப் பிரிவினரும் சுற்றுலாவைச் சார்ந்தவர்கள். தற்போது சுற்றுலா நடவடிக்கைகைள் தொடங்கியுள்ளதால் மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வரும் நீலகிரி மலை ரயிலை இயக்க வேண்டும். ரயில் சேவைகள் தொடங்கியுள்ள நிலையில், மலை ரயிலை இயக்க ரயில்வே அமைச்சம் அனுமதி அளிக்க வேண்டும். மலை ரயிலில் குறிப்பிட்ட அளவே பயணிகள் பயணிக்க முடியும் என்ற நிலையில், தனிமனித இடைவெளி மற்றும் கரோனா வழிமுறைகளை எளிதாக கடைப்பிடிக்க முடியும்.
மலை ரயில் சேவை தொடங்கினால், மாவட்டத்தில் மீண்டும் சுற்றுலா மேம்படும். மேலும், சரிந்த பொருளாதாரம் மீட்கப்படும்" என்றார்.