Published : 10 Sep 2020 04:20 PM
Last Updated : 10 Sep 2020 04:20 PM

இன்னும் 7 மாதங்களில் திமுக ஆட்சி எனும் இலக்கை அடையும் வகையில் பணியாற்ற வேண்டும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

இன்னும் 7 மாதங்களில் திமுக ஆட்சி எனும் இலக்கை அடையும் வகையில் பணியாற்ற வேண்டும் என, திமுக தொண்டர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (செப். 10) திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:

"திமுகவின் சிறப்பான வரலாற்றில் ஒரு பொருள் செறிந்த நாளாக மாறியிருக்கிறது செப்டம்பர் 9. திமுக தொண்டர்களுக்கு செப்டம்பர் மாதம் எப்போதுமே களிப்பும் ஊக்கமும் தரும் மாதம்தான்!

செப்டம்பர் 15, அண்ணாவின் பிறந்த நாள். செப்டம்பர் 17, பெரியார் பிறந்த நாள். அதே நாள்தான், திமுகவும் பிறந்த நாள்!

எனவே, முப்பெரும் விழாவாக அதனை நாம் கொண்டாடி மகிழ்வது வழக்கம். திருவிழாவுக்கு முன் பந்தற்கால் நடுவது போல, இந்த முப்பெரும் விழாவுக்கு முன்பாக, நேற்றைய செப்டம்பர் 9 சிறப்பான நாளாக அமைந்துவிட்டது.

இந்திய அரசியலைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் வலிமை திமுகவுக்கு எப்போதுமே உண்டு என்பதை அண்ணாவும் தலைவர் கருணாநிதியும் பல முறை நிரூபித்திருக்கிறார்கள். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்போதும், உங்களின் உழைப்பாலும் தமிழக மக்களின் பேராதரவாலும், திமுகவை இந்திய ஒன்றியமே திரும்பிப் பார்த்து வியப்படைந்தது. நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக, திமுக தன் வலிமையைக் காட்டியது.

இப்போது, கரோனா காலத்தில் அரசியல் பணிகள் பலவும் முடங்கியுள்ள நிலையில், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் இவற்றுக்கு அனுமதி இல்லாத சூழலில், 3,500-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்ட பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தைக் காணொலி வாயிலாக நடத்துவதென்பது சாத்தியமாகுமா என்கிற சந்தேகம் அனைத்துத் தரப்பிலும் இருந்தது.

கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகளாகவும், ஆச்சரியக்குறிகளைக் கேள்விக்குறிகளாகவும் மாற்றுகின்ற வலிமை, எளிய மக்களின் இனிய இயக்கமான திமுகவுக்கு உண்டு என்பதை, கடந்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து நிரூபித்து வருகிறோம். காணொலி வாயிலான பொதுக்குழுவும் அப்படிப்பட்டதுதான்.

திமுகவின் மாநில மாநாடு நடைபெறுவதற்கு முன்பாக, மாவட்ட மாநாடுகள் வரிசையாக நடைபெறும். அதில் கிடைக்கின்ற ஊக்கமும் அனுபவமும் மாநில மாநாட்டைச் சிறப்பாக நிறைவேற்றிட உதவும். அப்படித்தான், இந்தக் கரோனா நோய்த்தொற்றினால் உருவாகியுள்ள ஊரடங்கு காலத்தில், ஒவ்வொரு நாளும் காணொலி வாயிலாகவே தலைவர் கருணாநிதியின் உடன்பிறப்புகளான உங்களைச் சந்தித்து வந்தேன்.

மாவட்ட திமுக நிர்வாகிகள், ஒன்றிய - நகர நிர்வாகிகள், திமுகவின் மற்ற அமைப்புகளின் நிர்வாகிகள், துணை அமைப்புகளின் பொறுப்பாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எனக் காணொலி வாயிலாக நாள்தோறும் சந்திப்புகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. மாவட்ட திமுக செயலாளர்கள் கூட்டத்தையும் காணொலி வாயிலாக நடத்தினோம்.

இந்தத் தொடர் அனுபவங்களும், அதனால் கிடைத்த ஊக்கமும்தான், அனைத்து மாவட்ட திமுக நிர்வாகிகளின் முழுமையான உற்சாகமான ஒத்துழைப்புடன் செப்டம்பர் 9 அன்று காணொலி வாயிலான பொதுக்குழுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்திட முடிந்தது.

திமுகவின் தொடக்கக்கட்டத்தில் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் என்பது கிராமத்து வீட்டுத் திண்ணைகளில் தலைவர்களும் நிர்வாகிகளும் படுத்துறங்கி எழுந்து, அப்பகுதியிலேயே ஒன்றுகூடிக் கூட்டத்தை நடத்தியது குறித்து திராவிட எழுத்தாளர் சுபகுணராஜன் நினைவூட்டிப் பதிவிட்டிருக்கிறார்.

திண்ணையில் தொடங்கிய பொதுக்குழு, உலகம் வியக்கும் வகையில் திட்பம் வாய்ந்த இணைய வழியில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் இந்தப் பொதுக்குழுவின் முக்கியத்துவம் என்பது, திமுகவின் புதிய பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு என்பதாகும்.

நம் உயிர்நிகர் தலைவரின் கொள்கைச் சகோதரனாகத் துணை நின்று, தோள் தந்து, நிழல் வழங்கிய க.அன்பழகன் மறைவெய்திய நிலையில், அவர் வகித்த பொதுச் செயலாளர் பொறுப்புக்கு துரைமுருகன் ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றார்.

துரைமுருகன் பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்றதால், அவர் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுப் பொறுப்பேற்றிருக்கிறார்.

திமுகவின் தலைமைப் பொறுப்பில் உங்களால் அமரவைக்கப்பட்டிருக்கிற நானும், பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள துரைமுருகனும், பொருளாளராகத் தேர்வாகியுள்ள டி.ஆர்.பாலுவும் மிசா சிறைவாசிகள். ஜனநாயகம் காக்கும் போரில், நம்மையே கொடுத்தேனும் இயக்கத்தைக் காக்க வேண்டும் என்ற தலைவர் கருணாநிதியின் ஆணையேற்று செயல்பட்டு, பொதுவாழ்வில் பயணிப்பவர்கள். வட்டக் கிளைக் கழகத்தில் உறுப்பினராகி, படிப்படியாக தலைமைக் கழகப் பொறுப்புக்கு வந்திருப்பவர்கள். கொள்கை உறுதியுடன், போர்க்குணமிக்க உழைப்பு உள்ள எவரும் இந்த இயக்கத்தில் உயர்நிலைக்கு படிப்படியாக உயர்ந்திட முடியும் என்பதற்கு அடையாளமாக இருக்கிறோம்.

திமுகவில் அதற்கான வாய்ப்புகள் தொடரும் என்பதன் அடையாளமாக ஏற்கெனவே மகளிர் மற்றும் ஆதிதிராவிடர் பங்களிப்பு உள்பட 3 துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ள நிலையில், திமுகவின் கட்டமைப்பையும் பணிகளையும் விரிவாக்கிடும் வகையில், மேலும் 2 துணைப் பொதுச் செயலாளர்களை நியமனம் செய்வதற்கேற்ற வகையில் திமுக அமைப்பு விதிகளில் உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, முன்னாள் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினருமான க.பொன்முடியும், மத்திய முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

திமுக அமைப்பில் இ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் துணைப் பொதுச் செயலாளர்களாக உள்ள நிலையில், திமுகவின் ரத்தநாளங்களான தொண்டர்களின் பேராதரவுடன் க.பொன்முடியும், ஆ.ராசாவும் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு செயலாற்றி வருகிறார்.

எந்தப் பொறுப்பில் இருந்தாலும், திமுகவின் உறுப்பினர் என்பதே எல்லாவற்றையும்விட மதிப்புக்குரிய பொறுப்பு. தொண்டர்களே இந்த இயக்கத்தின் அடிப்படை வலிமை. அதனை உணர்த்தும் வகையில் திமுகவின் முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி தொடங்கிப் பல முன்னோடிகளும் வாழ்த்துரை வழங்கினார்கள். நாம் கூடிக் கலையும் சாதாரணக் கூட்டமல்ல; கூடிப் பொழியும் மழை மேகம்.

திமுக பொதுக்குழுவும் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாத்திடும் தீர்மானங்களைப் பொழிந்திருக்கிறது. கரோனா பேரிடர் காலத்தில் தன்னலம் மறந்து பணியாற்றியோருக்கான பாராட்டு, 'ஒன்றிணைவோம் வா' எனும் மகத்தான செயல்பாடு, தலைவர் கருணாநிதி வழங்கிய அருந்ததியருக்கான 3% உள் ஒதுக்கீட்டுக்கும், மருத்துவக் கல்வி, முதுநிலை மருத்துவக் கல்வியில் திமுக நிலைநாட்டிய சமூக நீதி, அபாயகரமான தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, குடிமைப் பணிகள் தேர்வில் கடைப்பிடிக்கப்படும் சமூக அநீதி, சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையைக் கைவிட வலியுறுத்தல், ஊழல் அதிமுக அரசைப் பாதுகாக்கும் மத்திய பாஜக அரசுக்குக் கண்டனம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுப் பலிகளுக்கு நீதி, கரோனா பேரிடர் காலத்தில் அதிமுக ஆட்சியின் அலங்கோலம், மத்திய, மாநில அரசுகளின் விவசாயிகள் விரோதக் கொள்கைக்கு எதிர்ப்பு, மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி, திமுகவை அரியணை ஏற்ற சூளுரை உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தத் தீர்மானங்களில் நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவற்றில் குரல் கொடுப்பதன் வழி தீர்வு காணக்கூடியவை இருக்கின்றன. நீதிமன்றங்கள் வழியே சட்டப்போராட்டம் நடத்தி தீர்வு காணக்கூடியவை உண்டு. எல்லாவற்றுக்கும் மேலானது மக்கள் மன்றம். ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களின் பேராதரவைத் தொடர்ந்து பெற்றுவரும் திமுக, எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று அரியணை ஏறும் நாளில் தமிழ்நாட்டைப் பீடித்துள்ள இருள் விலகும். உதயசூரியக் கதிர்கள் ஒளி வீசும். அதற்கான வெற்றிப்பாதையைத் திட்டமிட்டு அமைத்து, நாளைய வெற்றிக்குக் கட்டியம் கூறிடும் வகையில் காணொலி வாயிலாக மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது பொதுக்குழுக் கூட்டம்.

உங்களில் ஒருவனாக இந்தத் தீர்மானங்களை உங்களிடம் ஒப்படைக்கிறேன். அவற்றை நிறைவேற்றிடும் வகையில் உங்கள் உழைப்பைத் தாருங்கள். ஒருங்கிணைந்து செயலாற்றுங்கள். திமுகவின் மீது காழ்ப்புணர்வு கொண்டு வெறும் வாயை மெல்லுகின்றவர்களுக்கு, அவல் அள்ளிப் போடும் செயல்களைத் தவிர்த்து, மக்களிடம் சென்று களப்பணிகளை மேற்கொள்ளுங்கள்.

அடுத்து அமையவிருப்பது திமுக அரசுதான் என்ற மக்கள் மனதில் ஏற்கெனவே எழுதப்பட்டுள்ள தீர்ப்பை, வாக்குப்பதிவு நாளில் உறுதிப்படுத்தும் வகையில் பணியாற்றிட சூளுரைத்துக் களம் காணுங்கள். 7 மாதங்களில் திமுக ஆட்சி எனும் இலக்கை அடைந்து, அதனை நம் உயிர்நிகர் தலைவரின் ஓய்விடத்தில் காணிக்கை ஆக்குகின்ற வெற்றித் திருநாள் வரை நமக்கு ஓய்வில்லை".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x