

நீட் தேர்வுக்கு எத்தனை பேரை நாம் இழப்பது என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (செப்.10) வெளியிட்ட அறிக்கை:
"மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைப் பறிக்கும் நீட் தேர்வுக்குத் தொடர்ந்து மக்கள் மத்தியில் நாடு தழுவிய அளவில் எதிர்ப்புக் குரல் எழுந்த போதும், அதற்கெல்லாம் செவி சாய்க்காமல், நீட் தேர்வை நடத்தியே தீருவது என்று ஆளும் பாஜக அரசும், அதற்கு ஆதரவாக நீதிமன்றங்களும் செயல்படுகின்றன.
இதோ இன்னுமொரு களப் பலி!
கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் அரியலூர் அனிதா நீட் தேர்வால் பலியானார். அதனைத் தொடர்ந்து எத்தனை இளம் குருத்துகள் பலிகொடுக்கப்பட்டுவிட்டன. நேற்று (செப். 9) அரியலூர் மாவட்டம் செந்துறை அருகில் உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடந்த இரண்டு முறை தேர்வெழுதி மூன்றாம் முறையாக இவ்வாண்டு தேர்வெழுதத் தயாராகி வந்த அவர், தேர்வு அழுத்தத்தால் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இன்னும் இந்தக் கொடுமை தொடர்வதா? மத்திய அரசு, தன் நோக்கத்தில் உறுதியாக இருக்குமேயானால், மாநில அரசு தனக்கு உள்ள சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்திப் போராட வேண்டாமா? எத்தனை பேரை நாம் இழப்பது? எத்தனை ஆண்டுகள் இக்கொடுமை தொடர்வது?
பலியாகியுள்ள மாணவர் விக்னேஷின் குடும்பத்தினருக்கு ஆறுதலும், இரங்கலும் சொல்வதே கடினமானதாயிற்றே! எத்தனை கனவுகளை அவர்கள் சுமந்திருப்பார்கள்? அரசுகளுக்கு அந்தப் பெற்றோரின் ஓலம் கேட்கிறதா?".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.