Last Updated : 14 Sep, 2015 04:49 PM

 

Published : 14 Sep 2015 04:49 PM
Last Updated : 14 Sep 2015 04:49 PM

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 நாட்களில் 15 கொலைகள்: குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 45 நாட்களில் மட்டும் 15 கொலை சம்பவங்கள் நடந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநில எல்லைகளையொட்டி உள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம். விவசாயத்தை பிரதான தொழி லாகக் கொண்ட இம்மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் அதிகம் உள்ளனர். இளம்வயது திருமணம், குழந்தை விற்பனை, திருட்டுச் சம்பவங்கள் மற்றும் நகை பணத்திற்காக கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் இங்கு அதிகளவில் நடந்து வருகிறது.

இதுமட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு, மாநில எல்லையில் உள்ள வனப்பகுதியில் உடல்களை வீசிச் செல்லும் சம்பவங்களும் நிகழ்கிறது. இதுபோன்ற சம்பவங்களில் கொலையானவர் களின் விவரம், கொலையாளிகளின் விவரம் கண்டுபிடிப்பதில் காவல்துறையினருக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 45 நாட்களில் 15 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. ஓசூரில் முன்விரோத பகை காரணமாக இளைஞரை மர்ம கும்பல் கொலை செய்தது, காதலுக்கு இடையூறாக இருந்தவரை கொலை செய்ய சென்ற கும்பல் ஆள்மாறாட்டத்தில் பிளஸ் 2 மாணவரைக் கொன்றது, பர்கூரில் பணம், நகைக்காக மூதாட்டிக் கொலை, தேன்கனிக்கோட்டையில் துப்பாக்கியால் விவசாயி சுட்டுக் கொலை, ராயக்கோட்டையில் தவறான பழக்கத்தை கைவிட மறுத்த தாயை மகன்களே கொன்றது, இந்த சம்பவத்தில் விரக்தியில் தந்தை தற்கொலை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.

மேலும், தவறான பழக்கத்திற்கு இடையூறாக இருந்த சிறுவனை, திருப்பதியில் கொலை செய்து கிருஷ்ணகிரி மலையில் உடல் வீசப்பட்ட சம்பவம், சூளகிரி தொழில் அதிபர் முரளி ஓசூரில் கடத்திக் கொலை, வேப்பனப்பள்ளி அருகே வனப்பகுதியில் பெண் கொலை என கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 11 கொலைகள் நடந்துள்ளது.

இம்மாதத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் பணம், நகைக்காக 4 கொலை நடந்துள்ளது. கெலமங்கலத்தில் நிதிநிறுவன அதிபர் கொலை, ஓசூரில் ஆசிரியர் கொலை, நிலத்தகராறில் முதியவர் கொலை மற்றும் நேற்று முன்தினம்தனியார் நிறுவன காவலாளி கொலை என 4 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது.

இதில் சில கொலை வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சில சம்பவங்களில் குற்றவாளிகளை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, அடிப்படை கல்வியறிவு இல்லாதது, மது பழக்கம் உள்ளிட்டவற்றால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. தங்களை சார்ந்தவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை குறித்து கவலைப்படாமல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதனைத் தடுக்க சட்டங்கள் குறித்தும், தவறுகளுக்கு உரிய தண்டனைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x