அரியலூர் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி; முதல்வர் பழனிசாமி உத்தரவு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

அரியலூர் மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப். 10) வெளியிட்ட அறிக்கை:

"அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், மருதூர் மதுரா இலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் விக்னேஷ் என்பவர் மன உளைச்சல் காரணமாக நேற்று (செப். 9) தற்கொலை செய்துகொண்டு இறந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கல்வி தகுதிக்கேற்ப அரசு / அரசு சார்ந்த பணி வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசு மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறையோடும், அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் செயல்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் விருப்பத்தினை அறிந்து நல்வழிப்படுத்திட வேண்டுமெனவும் அன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன்.

மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் எதையும் எதிர்கொள்ளும் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால், வெற்றி பெறுவது நிச்சயம்"

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in