

ஓவிய கலையால் வரலாற்றில் இடம்பெற்றவர்களை தமிழக கவின்கலை கல்லூரி பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (செப். 10) வெளியிட்ட அறிக்கை:
"இந்தியாவில் ஒவியத்திற்கு என்று புகழ்மிக்க பல்வேறு கல்லூரிகள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது இந்தியாவிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட சென்னையில் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரி ஆகும். இது 170 ஆண்டுகள் பழமையானது. இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பலர் இந்தியாவுக்கும் ஏன் உலகளவிலும் ஓவிய வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி பெருமை சேர்த்துள்ளனர்.
சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் பயிலும் முதுநிலை கவின்கலை படிப்புக்கான பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய நவீனக் கலையின் வரலாறு என்ற தாள் இடம்பெற்றுள்ளது. அதில் மும்பை, கொல்கத்தா, லக்னோ ஆகிய ஓவியப் பள்ளிகளை குறிப்பிடப்படும் போது அந்தந்த மாநிலங்களில் தலைசிறந்த ஒவியர்களின் வரலாற்றை முன்னிலைப்படுத்தியுள்ளனர். இது வரவேற்கத்தக்கது.
ஆனால், தமிழ்நாடு ஓவியப்பள்ளி என்ற பாடத்திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஓவிய ஆளுமை நிறைந்தவர்களை பற்றி குறிப்பிடப்படவில்லை. சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் பயின்ற உலகுக்கே பயிற்றுவித்த வித்தகர்கள் கே.சி.எஸ்.பணிக்கர், எஸ்.தனபால், எல்.முனுசாமி, ஏ.பி.சந்தானராஜ், கன்னியப்பன், ஆதிமூலம், அருள்தாஸ் ஆகியவர்கள் தான் நினைவு கூறத்தக்கவர்கள்.
இவர்களின் பங்களிப்பு வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவை. வருங்கால மாணவ, மாணவிகள் இவர்களை தெரிந்து, ஆராய்ந்து அவர்களை வாழ்வில் பின்பற்றப்பட வேண்டியவர்கள்.
ஆனால், இவர்களை விடுத்து புதிதாக கதைகளை, செய்திகளை அறிந்துகொள்ள ஓவியம் வரைவதில் ஆற்றல் பெற்றவர்களை இடம்பெறச் செய்து இருக்கின்றனர். இவர்களும் திறமையானர்வர்கள் தான்.
இருந்தாலும் கதைகளையும், செய்திகளையும் ஓவியங்கள் மூலம் விளக்குவதற்கும், சிந்தனைகளையும், கதைகளையும் விளக்கும் ஓவியத்திற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. ஓவியம் மூலம் காட்சிப்படுத்துவது வெவ்வேறாகும்.
வருங்கால மாணவர்கள் சிந்தனைகளையும் கதைகளையும் விளக்கும் ஓவியங்களைத்தான் அறிந்து தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். அதேபோல் மூன்றாம் பருவத்திற்கான செய்முறை தேர்வில் நாட்டிய முத்திரைகள் மற்றும் நாட்டியத்திற்கான காட்சிப்படுத்துதல் போன்ற பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஒவியம் என்பது தனித்துவமானது. இதில் இசையையும் நாட்டியத்தையும் புகுத்துவது என்பது சரியான முன்னுதாரணமாக ஆகாது. இது மாணவர்களின் வருங்காலத்தில் பல குழப்பத்தைதான் ஏற்படுத்தும்.
தமிழக முதல்வரை வேந்தராக கொண்டு செயல்படும் ஒரே பல்கலைக்கழகமான தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம் ஆகும். ஆகவே, தமிழக அரசு புகழ்வாய்ந்த, தகுதிவாய்ந்த, உலகத்தரம் வாய்ந்த ஓவியங்களை, காலத்தால் அழியாத கலை பொக்கிஷங்களை நமக்களித்த ஓவிய பிதாமகர்களை போற்றும் விதமாக, அங்கீகாரம் அளிக்கும் விதமாக, பாடத்திட்டத்தில் திருந்தங்கள் செய்து, அவர்களின் வரலாற்றை தமிழக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
அவர்களை பற்றி வருங்கால சந்ததியினர் படித்து பயன்பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.