பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; சு.திருநாவுக்கரசர் எம்.பி. வலியுறுத்தல்
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, சு.திருநாவுக்கரசர் இன்று (செப். 10) வெளியிட்ட அறிக்கை:
"பத்து ஆண்டாக அரசு பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் பத்து கல்வி ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
பணி நிரந்தரம் செய்யாத நிலையில் மே மாதம் சம்பளம், போனஸ், வருடாந்திர ஊதிய உயர்வு,மகப்பேறு விடுப்பு, இறந்தவர் குடம்பநலநிதி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது மனிதநேயமல்ல.
தமிழ்நாட்டில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களான தையல், இசை கணினி அறிவியல் தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி ஆகியவற்றை கற்றுத் தருவதற்காக எஸ்.எஸ்.ஏ திட்ட வேலையில் 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு 11.11.2011 அன்று பிறப்பித்த ஆணை 177-ன்படி வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்படனர்.
இதற்காக மாதம் ரூ.5,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் 26.08.2011 அன்று அறிவித்தார். பகுதி நேரமாக இருந்தாலும் கூட ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகாவது தங்களுக்கு பணிநிரந்தரம் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் தான் இந்தப் பணியில் சேர்ந்தனர்.
ஆனால், அதன்பின் 10-வது கல்வியாண்டு தொடங்கிய போதிலும் கூட பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, பகுதிநேர ஆசிரியர்களை பணியமர்த்திய அரசாணையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை நிறைவேற்றித் தருவதற்கு கூட அரசு தயாராக இல்லை என்பது வருத்தம் தரக்கூடியது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த 177-வது அரசாணைப்படி ஒரு பகுதி நேர ஆசிரியர் வாராத்திற்கு 3 அரைநாட்கள் வீதம் மாதத்திற்கு 12 அரை நாட்கள் மட்டும் பணி செய்தால் போதுமானது.
இந்த வகையில் ஒவ்வொரு பகுதி நேர ஆசிரியரும் அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணிபுரியலாம். அதற்கான ஊதியத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இது நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் ஒவ்வொரு பகுதி நேர ஆசிரியருக்கும் மாதத்திற்கு அதிகபட்சாமாக ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் கிடைக்கும். ஆனால், இது செயல்படுத்தப்படவில்லை.
பின்னர் பிறப்பிக்கப்பட்ட 186-வது அரசாணைப்படி அதிகபட்சமாக இரண்டு பள்ளிகளில் பணியாற்றலாம் என்று விதிகள் திருத்தப்பட்டன. ஆனால், இந்த அறிவிப்பையும் தமிழக அரசு நடைமுறைப்டுத்தவில்லை.
அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் தட்டுப்பாடு இருப்பதால் பகுதி நேர ஆசிரியர்களை ஈடுபடுத்தி ஆசிரியர் இல்லாத வகுப்புகளை கவனித்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவ்வாறாக முழுமையாக ஒரே பள்ளியில் பயன்டுத்திக் கொள்வதற்காகவே பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் பணி தரப்படுவதில்லை. சம்பளத்தையும் உயர்த்தாமல் அதற்கான வாய்ப்புகளையும் மறுப்பது வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும்.
12 மாதத்திற்கும் சம்பளம் வழங்கவே ரூ.99 கோடியே 29 லட்சம் நிதி ஆண்டொன்றுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 11 மாதங்களுக்கான ஊதியம் மட்டும் தான் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மே மாதத்திற்கான ஊதியம் தருவதில்லை வேலைக்கு சேர்ந்த பின் இப்படி சம்பளத்தை தராமல் மறுப்பது மனிதநேயமில்லை.
சக ஆசிரியர்களுக்குக் கோடைகால விடுமுறையான மே மாதத்தில் சம்பளம் வழங்குவதைப் போலவே பகுதி நேர ஆசிரியர்களுக்கும் நியாயமாக சம்பளம் வழங்க வேண்டும். ஆனாலும் முடிந்துபோன 9 ஆண்டுகளின் மே மாத சம்பளம் ஒவ்வொருவருக்கும் ரூ.61 ஆயிரம் என ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடி சம்பளத்தை தராமல் மறுப்பது நீதியல்ல.
இந்த 10 ஆண்டுகளில் அரசு வேலையை நம்பி வந்த 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்களில் மரணம், 58 வயதாகி பணி ஓய்வு போக தற்போது மீதமுள்ள 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களே பணிபுரிந்து வருகின்றனர்.
ரூ.5,000 சம்பளத்தில் பணி அமர்த்தப்பட்ட இவர்களுக்கு சம்பள உயர்வு முதல் முறையாக 2014-ம் ஆண்டு 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. அதோடு கடைசியாக 2017-ம் ஆண்டு 700 ரூபாய் உயர்த்தி தரப்பட்டது.
10 ஆண்டுகளில் 2 முறை சம்பள உயர்வோடு இந்த குறைந்த சம்பளமான 7,700 ரூபாயை வைத்துக் கொண்டு விஷம் போல ஏறிவரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்ள முடியாமல் வறுமையில் வாடும் ஆசிரியர்களின் குடும்பத்தின் நிலையை அரசு உணர வேண்டும்.
ஆந்திராவில் ரூ.14 ஆயிரம், அந்தமானில் ரூ.21 ஆயிரம், கோவாவில் ரூ.22 ஆயிரம் சம்பளம் இதே பகுதி நேர ஆசிரியர்களுக்குத் தரப்படுகிறது. கர்நாடகா, கேரளா சண்டிகர், மாநிலங்களில் ரூ.10 ஆயிரம் தரப்படுகிறது. இந்த சம்பளத்தைக்கூட தமிழ்நாட்டிலும் கிடைக்கச் செய்ய ஏன் இன்னும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
போனஸ், அனைத்து தொகுப்பூதிய மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கும் வழங்கும் போது இவர்களுக்கு இது வரை ஒரு முறை கூட போனஸ் வழங்காமல் உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும், கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு செய்து மூன்றாண்டுகள் கடந்த நிலையில் இதுநாள்வரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
தற்போது 12 ஆயிரத்து 544 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க ஆண்டுக்கு சுமார் 100 கோடி செலவாகிறது. 16 ஆயிரத்து 549 பேரில் ஏற்பட்டுள்ள சுமார் 5,000 காலிப்பணி இடங்களின் நிதி 7-வது ஊதியக்குழு 30 சதவிகிதம் ஊதிய உயர்வு வருடாந்திர 10 சதவிகித ஊதிய உயர்வு 9 வருட மே மாதம் சம்பளம் மற்றும் போனஸ் போன்ற நீண்டகால நிலுவை நிதியை கணக்கிட்டால், பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு நிதி செலவு ஏற்படாது.
சிறப்பாசிரியர்கள் நிலையில் கால முறை ஊதியத்தில் பணியமர்த்த மேலும் 200 கோடி நிதி ஒதுக்கினால் போதுமானது. எனவே, பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
