

தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் வீட்டுக் கடன் பெற்றிருந்த, வல்லத்தைச் சேர்ந்த வெல்டிங் கூலித் தொழிலாளி ஆனந்த்(40), கடன் மற்றும் வட்டித் தொகையை செலுத்தச் சொல்லி வங்கி அலுவலர்கள் கொடுத்த நெருக்கடியால் கடந்த ஆக.27-ம் தேதி வங்கி முன் தீக்குளித்தார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி ஆக.29-ம் தேதி இறந்தார். வங்கியைக் கண்டித்தும், நியாயம் கோரியும் பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டத்தை அடுத்து, வங்கிக்கடன் நிலுவை ரூ.6 லட்சத்து 94 ஆயிரத்து 287 தள்ளுபடி செய்யப்படும். இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என வங்கி அலுவலர்கள் ஆக.30-ம் தேதி உறுதி அளித்தனர்.
இந்நிலையில், வீட்டுக் கடன் அடமானப் பத்திரம், கடன் தள்ளுபடி சான்றிதழ், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.5 லட்சத்துக்கான பத்திரம் ஆகியவற்றை தஞ்சாவூர் கோட்டாட்சியர் வேலுமணி, வட்டாட்சியர் வெங்கடேசன் ஆகியோர் ஆனந்த்தின் மனைவி ஹேமாவிடம் நேற்று வழங்கினர்.