

தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள மோர்தானா அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் இன்று மாலைக்குள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த நேரத்திலும் உபரிநீர் வெளியேற்றப் படலாம் என்பதால் ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை மாவட் டங்களில் கடந்த இரண்டு தினங் களாக பரவலான மழை பெய்து வருகிறது.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக கலவையில் 82.4 மி.மீ மழை பதிவானது. பொன்னையில் 28.6, ஆற்காட்டில் 9, வாலாஜாவில் 26, அம்மூரில் 4, குடியாத்தத்தில் 4.2, மேல் ஆலத்தூரில் 5.4, வேலூரில் 0.3 மி.மீ மழை பதிவானது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று பிற்பகல் 3 மணி முதல் பரவலான மழை இரவு வரை விட்டுவிட்டு பெய்தது.
மோர்தானா அணை
ஆந்திர மாநில எல்லையை யொட்டியுள்ள தமிழக பகுதியில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணைக்கான நீர்ப்பிடிப்பு பகுதி ஆந்திர மாநில வனப்பகுதியில் உள்ளது. அங்கு பெய்து வரும் மழையால் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து இருக்கிறது. இதனால், அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
மோர்தானா அணை 11.5 மீட்டர் உயரமும் அணையின் முழு கொள்ளளவு 261.36 மில்லியன் கன அடியுமாகும். அணையின் மூலம் 19 ஏரிகள் பயன்பெறும் என்ப துடன் 8 ஆயிரத்து 367 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அணைக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் மாலை 386.360 கன அடியாக இருந்தது. இரவில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நேற்று காலை நிலவரப்படி அணை யின் நீர்மட்டம் 10.20 மீட்டரை கடந்தது. நீர் இருப்பு 223.071 மில்லியன் கன அடியாக இருந்தது. அணைக்கான நீர்வரத்து 451.018 கன அடியாக இருந்தது.
இன்று மாலைக்குள் அணை முழு கொள்ளளவை எட்டும் என்ப துடன் உபரி நீர் அப்படியே வெளி யேற்றப்படும் என்பதால் பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையில், மோர்தானா அணையின் தற்போதைய நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மோர்தானா அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட உள்ள நிலையில் ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள மோர்தானா, கொட்டாரமடுவு, ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, ஜங்காலப்பள்ளி, உப்பரப்பள்ளி, தட்டப்பாறை, ஆண்டிகான்பட்டி, ரங்கசமுத்திரம், ரேணுகாபுரம், அக்ராவரம், பெரும் பாடு, மீனூர், மூங்கப்பட்டு, சீவூர், குடியாத்தம் நகரம், இந்திராநகர், ஒலக்காசி, சித்தாத்தூர் மற்றும் ஐதர்புரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.