

பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்த விவகாரத்தில் ஆளும் அதிமுக தலைவர்களின் உதவியில்லாமல் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்திருக்க முடியாது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோரும் சேர்க்கப்பட்டு பயனடைந்ததாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து பல்வேறு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திரும்பப்பெறப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமர் கிசான் திட்டத்தில் 13 மாவட்டங்களில் முறை கேடு நடந்துள்ளதை கண்டறிந்து, சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முறைகேட்டுக்கு காரணமே, கடந்த ஆண்டு இறுதியில் விவசாயிகள் தானாக பதிவு செய்யும் முறையை மத்திய அரசு அறிவித்ததுதான் என்று முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் கனிமொழி தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“பிரதமர் கிஸான் திட்டத்தில் 110 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளைகள் அனைத்தும் பொதுமுடக்க காலத்தில்தான் நடைபெற்றுள்ளன.
வங்கிகளில் கடன் பெறுவதற்கு நாங்கள் உதவுகிறோம் என்று தமிழக பிஜேபி இணையதளம் தொடங்கியது இதற்காகத்தானா? 5 லட்சம் போலி பயனாளிகள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதென்பது, ஆளும் அதிமுக தலைவர்களின் உதவி இன்றி நடந்திருக்க முடியாது”
என்று கனிமொழி பதிவிட்டுள்ளார்.